பீர்பாலின் அறிவுத் திறமையால் பலனடைந்தவர் பலர். சிலர் தனது முட்டாள்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பீர்பாலின் அறிவுத்திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினர்.
அப்படிப்பட்டவர்களுக்குப் பீர்பால் சரியான பாடம் புகட்டத் தவறியதே இல்லை.
ஆக்ராவில் பீர்பால் பெரும் புகழோடு விளங்கிய சமயம் நகரில் கிரிதலால் என்னும் பெயரில் பெரும் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவர்கள் முன்னோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டு சென்ற சொத்துக்களை வைத்துக்கொண்டு அவன் சுகமாக வாழ்ந்து வந்தான்.
ஆனால், கிரிதலால் படிக்காதவன். சிறிய வயதிலிருந்தே அவன் சரியாகப் பள்ளிக்கு சென்றதில்லை. அவனுடைய தந்தை அவனை எவ்வளவோ கண்டித்தும் பார்த்தார் கடைசியில் எப்படியோத் தொலையட்டும் என்று விட்டுவிட்டார்.
கிரிதலாலுக்கு இருபது வயது ஆன பொழுது, அவனுடைய தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு, முன்னோர்கள் சம்பாதித்தச் சொத்துக்கள் எல்லாம் கிரிதலலாவுக்குச் சொந்தமாயின. எனவேப் படிப்பு இல்லை என்பதைத் தவிர, அவனுக்கு வேற எந்தக் குறையும் இல்லை. கிரிதலாலின் முன்னோர்கள் அனைவரும் நன்கு கற்று அறிந்த பண்டிதர்களாக இருந்தனர்.
எனவே, அவனுடைய குடும்பத்தை ஊர் மக்கள் அனைவரும் பண்டிதர் குடும்பம் என்று அழைத்து வந்தனர்.
கிரிதலால் பணக்காரனாக இருந்ததால் அவனிடம் பரிசில் பெறுவதற்காக பல பண்டிதர்களும், பல கவிஞர்களும் அவனை நாடி வந்தனர். ஆனால், கிரிதலால் படிக்காமல் இருந்ததால் அவர்களுடைய கவிதைகளும், அவர்களுடைய பேச்சும் அவனுக்குச் சரியாகப் புரியவில்லை.
அப்போதுதான் அவனுக்குப் படிப்பின் அருமை புரிய வந்தது. இளமையிலேயேத் தானும் நன்றாக படித்திருந்தால் கற்று அறிந்த பண்டிதர்களுடன் தானும் சரிக்கு சமமாக அமர்ந்து இருந்திருப்பேன் அல்லவா என்று எண்ணி ஏங்கினான். அதோடு தனது காலத்தில் மறைந்து விட்ட பண்டிதர் குடும்பம் எனும் தனது குடும்பப் பெயரை மீண்டும் நிலைநாட்டவும் அவன் விரும்பினான்.
எனவே, எப்படியாவது பண்டிதர் ஆகி விட வேண்டும் என்னும் முடிவில், வயது கடந்த காலத்தில் கிரிதலால் படிக்க தொடங்கினார். ஆனால், அவன் எவ்வளவுதான் படித்தும், எதுவும் அவன் மண்டையில் ஏறவில்லை.
ஆனால், கிரிதலால் தனது முயற்சியை விட்டுவிடவில்லை. தான் எப்படியாவது ஒரு பண்டிதராகி விட வேண்டும் என்றும், எல்லோரும் தனது முன்னோர்களை அழைத்தது போலவே தன்னையும் பண்டிதர் என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினார்.
பண்டிதர் என்னும் பெயரை பெறுவதற்காக, தனது சொத்துக்களைச் செலவிடவும் அவன் தயாராக இருந்தான். எவ்வளவுதான் முயற்சி செய்தும் யாரும் அவனைப் பண்டிதர் என்று அழைக்க யாரும் முன் வரவில்லை. ஒருவேளை, அக்பர் சக்கரவர்த்தியின் மந்திரியான பீர்பாலிடம் சென்றால், நான் பண்டிதராக அவர் ஏதாவது யோசனை சொல்லக் கூடும் என்று கிரிதலால் நினைத்தான்.
கிரிதலால் ஒரு நாள் பீர்பாலிடம் சென்று, ”ஐயா எல்லோரும் என்னைப் பண்டிதர் என்று அழைக்கத் தாங்கள்தான் ஏதாவது ஒரு யோசனை கூற வேண்டும்” என்று கேட்டான்.
பீர்பால் கிரிதலாலையைப் பற்றியும், அவனது ஆசையைப் பற்றியும் ஏற்கனவே நிறையக் கேள்விப்பட்டு இருந்தார்.
அவர் கிரிதலாலைப் பார்த்து, “ஐயா நீங்கள் நிறைய படித்து கல்வியில் சிறந்தவராக ஆகிவிட்டால், எல்லோரும் உங்களைப் பண்டிதர் என்று அழைப்பார்கள்” என்று கூறினார்.
“ஐயா நானும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. எனவேப் படிக்காமலே எல்லோரும் என்னைப் பண்டிதர் என்று அழைக்க, தாங்கள் தான் ஏதாவது ஒரு யோசனை கூற வேண்டும்” என்று கிரிதலால் பீர்பாலிடம் கெஞ்சினான்.
பீர்பால் சற்று நேரம் யோசித்தார். பின்னர், ஏதோ முடிவுக்கு வந்தவராக, “சரி இனிமேல் எல்லோரும் உங்களைப் பண்டிதர்” என்று அழைப்பார்கள் என்றார்.
இனி நீங்கள் போகலாம் என்று கூறி கிரிதலலாலை அனுப்பி வைத்தார்.
பின்னர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களைக் கூப்பிட்டு, “அதோ ஒருவர் போகிறாரே, அவர் பின்னால் சென்று அவரைப் பண்டிதர் பண்டிதர் என்று அழைக்க வேண்டும். அவர் அடிக்க வந்தாலும் ஓடி விடக்கூடாது அவரை தொடர்ந்து பின்னால் சென்று பண்டிதர் பண்டிதர் என்று சத்தம் போட வேண்டும்” என்று பீர்பால் கூறினார்.
பீர்பால் சொன்னபடி அந்த சிறுவர்கள் கிரிதலால் பின்னால் சென்று “ஓய் பண்டிதரே, பண்டிதரே, நலமா?” என்று கேலியாகக் கேட்டனர்.
“ஏய் பண்டிதரை அவ்வாறு கேலி செய்தால் அவருக்கு கோபம் வந்துவிடும்” என்று சொன்னான் அந்த சிறுவர்களில் ஒருவன்.
சிறுவர்கள் கேலி செய்வதை கண்ட கிரிதலாலுக்கு உண்மையிலேயேக் கோபம் வந்துவிட்டது. அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்துக் கோபத்துடன் சிறுவர்கள் மீது வீசினான்.
மூலைக்கு ஒருவராக சிதறி ஓடிய சிறுவர்கள், பின்னர் மீண்டும் திரும்பி வந்து “ஓய் பண்டிதரே பண்டிதரே” என்று முன்பை விட உரத்த குரலில் கத்தினர்.
சிறுவர்கள் பின்னால் கத்திக் கொண்டு செல்வதையும், கிரிதலால் அவர்களைத் துரத்துவதற்காகக் கற்களை எடுத்து வீசுவதையும் கண்ட அந்த வழியாகச் சென்ற பெரியவர்கள் சிலர், கிரிதலால் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரன் என்று கருதினர்.
அவர்களும் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிதலாலைப் பார்த்து, “பண்டிதர் பண்டிதர்” என்று கத்தினார்கள்.
கிரிதலாலுக்கு பண்டிதராகும் ஆசையே வெறுத்து விட்டது. எல்லோரும் தன்னை பண்டிதர் என்று அழைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. நிம்மதியாக வாழ விட்டால் போதும் என்று நினைக்கத் தொடங்கினான்.
ஆனாலும் அன்று முதல், அவனுக்குப் பண்டிதர் என்றும் பெயர் நிலைக்கத் தொடங்கிவிட்டது.