துறவி ஒரு முறை மிக வலிமையுள்ள எருதாகப் பூமியில் பிறந்து, அவரை நேசித்த ஒரு குடியானவனிடம் போய் கட்டுப்பட்டு நின்றார்.
ஊரில் எவருக்கும் கட்டுப்படாத வலிமைமிக்க எருது நமக்கு கட்டுபடுவதைக் கண்டு குடியானவன் மகிழ்ந்து அதற்குத் தின்பண்டம் கொடுத்துத் தடவித் தடவி மிகச் சிறப்பாக வளர்த்து வந்தான்.
அதோடு நிறைய பேசுவான். அந்த எருதும் அதாவது துறவியும் அவன் பேச்சை ரசித்துக் கேட்டு கொண்டிருப்பார்.
ஒரு சமயம் குடியானவனுக்கு வறுமை ஏற்பட்டு எருதிடம் போய் அழுதான்.
எருது பேசத் தொடங்கியது.
குடியானவன் ஆச்சரியபட்டான்.
“என்னால் பேச முடியும்! நீ நான் கூறுவது போல் ஊர் மக்களிடம் சென்று, எனது எருது நூறு மூட்டை நெல் வண்டிகளை இழுக்கும் அதற்குப் பந்தயமாக வயலையும் வீட்டையும் வைக்கிறேன். அதற்குப் பந்தயமாக நூறு பொன் இந்த ஊர்மக்கள் தர வேண்டும் என்று சொல். அவர்கள் பந்தயத்திற்க்கு ஒத்துக் கொள்வார்கள். நான் நூறு வண்டிகள் இழுத்து உனக்கு நூறு பொற்காசுகளை பெற்று தருகிறேன்” என்று சொன்னது.
அந்தக் குடியானவன் மகிழ்ந்தான்.
எருதுகளின் பின்னால் நூறு வண்டிகளைப் பூட்டினான்.
“எனது எருது நூறு வண்டிகளை இழுக்கும்” என்று அவன் சொன்ன போது ஊர் மக்கள் சிரித்தார்கள். பந்தயம் கட்டினார்கள். பந்தயம் கையழுத்தானது.
குடியானவன் எருதிடம் போனான், “ஏய்...எருதே உனக்கு எவ்வளவு சோறு போட்டிருப்பேன் உன்னை எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பேன். மிருகமே... அத்தனை வண்டிகளையும் இழு” என்று சொன்னான்.
எருது அசையவில்லை.
“நாயே... பேயே...” என்று திட்டினான்.
எருது அசையவில்லை.
ஊர்மக்கள் சிரித்து முட்டாள் என்று திட்டி, நிலத்தையும் வீட்டையும்... வாங்கிக் கொண்டார்கள்.
குடியானவன் நொந்து தனியே அழத் துவங்கினான்.
எருது பாசமாய் அவனது காலை நக்கிற்று.
அவன் எருதிடம், “இப்படிச் செய்து விட்டாயே” என்று புலம்பினான்.
”என்னை இதமான வார்த்தைகளால் இழுத்துப் போ, என்று சொல்லாமல் தகாத வார்த்தைகளால் எனை இரைத்ததும் நான் கலங்கி விட்டேன். இந்த முறை ஆயிரம் நெல் வண்டிகளை இழுப்பேன் என்று ஊர் மக்களிடம் சொல் என்னையும் உன்னையும் பந்தயம் வை. இந்த முறையும் தோற்பாய் என்று நிறைய பந்தயம் கட்டுவார்கள். அதை நீ பெற்றுக் கொள். ஞாபகம் வைத்துக் கொள். இதமாகப் பேசு, தகாத வார்த்தையால் என்னைப் பேசாதே...” என எருது சொல்லியது.
ஊர் மக்களிடம் போனான்.
எருது சொன்னதை அப்படியேச் சொன்னான். ஊர் மக்கள் ஏளனம் செய்தார்கள். இவர்களை அடிமையாக்கி கொள்ளலாம் என்று ஊர்மக்கள் அனேகம் பேர் அதிகமாக பந்தயம் கட்டினார்கள். எருது பின்னால் ஆயிரம் வண்டிகளைப் பூட்டினார்கள்.
ஊர் மொத்தமும் தோற்கப் போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்த்தது.
எருதுவிடம் போய், “ஐயா உமக்கு நிறைய செய்திருக்கிறேன், உங்களை நித்தமும் கொண்டாடி கொண்டிருக்கிறேன் . பிரபுவே, நான் மிகுந்த வறுமையில் வாடுகிறேன் உங்கள் வலிமையில் வண்டிகளை இழுத்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். ஐயா உங்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று வேண்டிக் கொண்டான்.
மிகச் சர்வ சாதாரனமாக ஆயிரம் வண்டிகளையும் வெகு தூரம் இழுத்துச் சென்று, பந்தயத்தில் வெற்றி பெற்று எண்ணற்றப் பரிசுகளைக் குடியானவனுக்கு வழங்கி அவனைச் செல்வந்தனாக மாற்றியது.