பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த சிறுவன் கையில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு உரத்த குரலில் ஆண்டவரை வேண்டிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த அறிஞர் ஒருவர், “எதற்காக உன் தேவனை இப்படிச் சத்தமிட்டு வேண்டுகிறாய்?” என்றார்.
சிறுவன், "என் ஆண்டவர் செங்கடலை இரண்டாகப் பிளந்து, தம் ஜனமாகிய இஸ்ரவேலரை வழி நடத்தியிருக்கிறார் என்று வாசித்தேன். அதனால் தான் அவரைத் வணங்குகிறேன்'' என்றான்.
அதற்கு அந்த அறிஞர், "நீ நினைப்பது போல, செங்கடல் ஆழமான கடல் இல்லை. அது வெறும் 10 அங்குல ஆழம் மட்டுமேக் கொண்டது. அதைப் பிரிப்பதும், இஸ்ரவேலரை வழி நடத்துவதும் ஒன்றும் பெரிய செயலில்லை. எனவே, இதில் உன் ஆண்டவரைப் புகழ்ந்து பாட ஒன்றுமில்லை” என்றார்.
வேதத்தைப் பொறுத்த மட்டில் அவன் கண்களைத் திறந்துவிட்டோம் என்று நினைத்து மகிழ்ந்தார் அவர்.
அடுத்த நிமிடம் அந்தச் சிறுவன் மீண்டும் பாடி வேண்டத் தொடங்கினான்.
சத்தம் கேட்டு திரும்பிய அறிஞர், "இனியும், ஏன் வேண்டுகிறாய்?'' என்றார்.
உடனே அந்தச் சிறுவன், "இஸ்ரவேலரைத் தண்ணீரின் நடுவே நடத்தியது மட்டுமின்றி, பார்வோனையும், அவனது ரதங்களையும், குதிரை வீரரையும் அந்த 10 அங்குல ஆழம் மட்டுமேக் கொண்ட கடலில் மூழ்கி மடிந்து போகப் பண்ணின ஆண்டவர் எவ்வளவு பெரியவர்? அதை எண்ணி வணங்குகிறேன்'' என்றான்.
அந்த அறிஞரின் முகம் வாடிப் போனது.