இரண்டு மீனவர்கள் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
வலையை வீசுவதும் பின் இழுப்பதும் வலையில் அகப்பட்ட மீன்களை அள்ளிக் கூடையில் போடுவதுமாக இருந்தனர்.
அவர்கள் மீன் பிடிப்பதை மரத்திலிருந்து ஒரு குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது.
"அப்படி வீச வேண்டும். இப்படி இழுக்க வேண்டும். மீன்களை அள்ளி கூடையில் போடவேண்டும். ஓஹோ! மீன் பிடித்தல் என்பது இவ்வளவுதானா? " என்று நினைத்த குரங்கிற்குத் தானும் மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
பசி எடுத்ததால் மீனவர்கள் இருவரும் வலையைக் குளத்தின் கரையில் வைத்துவிட்டு சற்று அருகிலிருந்த மரநிழலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு சற்று கண்ணயர்ந்து இளைப்பாறினார்கள்.
அந்த சந்தர்ப்பத்தைத்தானே அந்தக் குரங்கு எதிர்பார்த்திருந்தது.
உடனே மரத்திலிருந்து இறங்கி, தனது மீன் பிடி ஆசையைச் செயல்படுத்த முனைந்தது.
குளக்கரையில் இருந்த வலையை தூக்கியது. அப்படி வீச வேண்டும் இப்படி இழுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே வலையை வீசியது. அந்தோ பரிதாபம்! வலையை முறைப்படி வீசும் பயிற்சி அந்த குரங்குக்கு இல்லாததால் வலை அதன் மீதே விழுந்துவிட்டது. குரங்கு வலையில் வசமாக மாட்டிக் கொண்டது. தன்னை வலையிலிருந்து விடுவிக்க எவ்வளவோ போராடியும் குரங்கால் முடியவில்லை.
குரங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் ஆத்திரமுற்றவர்களாய் ஆளுக்கொரு தடியை எடுத்து வந்து குரங்கை வலைக்குள்ளேயே போட்டு நையப்புடைத்தனர். அதன் பின்னர், வலையிலிருந்து குரங்கை விடுவித்தனர்.
அது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்தது.