ஒரு ஆசிரமத்தில் இருந்த குருவுக்கு முதன்மைச் சீடன் ஒருவன் இருந்தான்.
குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்குச் செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூட செய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது.
ஒருநாள், குருவிடமே தனது எண்ணத்தைச் சொல்லி விட்டான்.
குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்து வரும்படி சொன்னார்.
அவனும் எடுத்து வந்தான். "இதில் என்ன இருக்கிறது?'' என சீடனிடம் கேட்டார்.
அவன், "தண்ணீர் இருக்கிறது” என பதில் சொன்னான்.
"இப்போது தண்ணீரைக் கொட்டிவிட்டு வா!'' என்றார் அவனிடம்.
அவனும் அப்படியேச் செய்தான்.
"இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!'' என குரு கேட்க, "ஒன்றுமில்லை'' என்றான்.
குரு சிரித்தார்.
சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடமேக் காரணம் கேட்டான்.
குரு அவனிடம், "பஞ்சபூதங்கள் என்ன?” என்று கேட்டார்.
அவன் "நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்'' என வரிசையாகச் சொல்லி முடித்தான்.
"மகனே! பஞ்சபூதத்தில் ஒன்றான தண்ணீர் இந்தப் பாத்திரத்திற்குள் இருந்த போது, அதை நீ சரியாகச் சொன்னாய். ஆனால், அது இல்லாத பாத்திரத்திற்குள் தற்போது காற்று இருக்கிறது. இது கூட உனக்கு தெரியவில்லையே?'' என்றார்.
குருவின் பார்வைக்கும், தனது பார்வைக்கும் வித்தியாசமிருப்பதைச் சீடன் உணர்ந்தான்.
தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதைப் புரிந்து கொண்டு, பணிவுடன் நடக்க ஆரம்பித்தான்.