ஒரு சிங்கம் காட்டிலுள்ள விலங்குகளை தாறுமாறாக அடித்து சுவைத்து வந்தது.
அதற்குப் பாடம் கற்பிக்க எண்ணிய நரி, “சிங்கராஜாவே! நாளை தாங்கள் என்னைச் சாப்பிட்டு மகிழலாம். நீங்கள் இறைக்க இறைக்க ஓடியே மற்ற மிருகங்களைக் கொல்கிறீர்கள். நான் அப்படி செய்ய விரும்பவில்லை. நானாகவே முன்வந்து உங்கள் விருந்தாகிறேன். என் இல்லத்துக்கு வாருங்கள்” என்றது.
சிங்கமும் நரியைப் பாராட்டி மறுநாள் சென்றது.
நரி ஒரு கிணற்றின் மேல் மெல்லிய துணியை விரித்து தயாராக வைத்திருந்தது.
சிங்கம் வந்ததும், “ராஜாவே! இந்த விரிப்பின் மேல் அமருங்கள்” என்றது.
சிங்கமும் தனக்கு மரியாதை தருவதாக எண்ணி, அதன் மேல் பாய்ந்து ஏறவே, துணியோடு சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்தது.
ஆனால், உள்ளே குறைந்த தண்ணீரே இருந்ததால் தப்பித்துக் கொண்டது.
எப்படியோச் சுவரைப் பற்றி வெளியே வந்துவிட்டது.
அதைப் பார்த்த நரி புதருக்குள் மறைந்து கொண்டது.
சில மாதம் கழித்து, மீண்டும் சிங்கத்தை சந்தித்த நரியிடம் சிங்கம் பாய்ந்தது.
“ராஜாவே! தவறாக நினைக்க வேண்டாம். நான் நல்ல எண்ணத்தில்தான் துணி விரித்து வைத்தேன். ஆனால், உங்கள் பலம் தாங்காமல் உள்ளே விழுந்து விட்டது. தாங்கள் பலசாலியல்லவா?” என்று புகழ்ந்தது.
“வாருங்கள்! நான் உங்களுக்காகப் படகு கொண்டு வந்துள்ளேன். படகில் மிதந்தபடியே என்னைச் சாப்பிடுங்கள்” என்றது நரி.
சிங்கமும் ஆற்றுக்குச் சென்று தண்ணீரில் கிடந்த மரக்கட்டை போன்ற ஒன்றின் மீது கால் வைத்து படகில் பாய முயன்றது.
உண்மையில் அது கட்டை அல்ல! ஒரு முதலை! அது சிங்கத்தை லபக்கென கவ்வி விழுங்க ஆரம்பித்து விட்டது.
நரி மகிழ்ச்சியாகப் புறப்பட்டது.