புத்தரிடம் ஒரு பணக்கார சீடன் சேர்ந்தான்.
அவன் எதிலுமே கடும் தீவிரத்தைக் கடைபிடிப்பதை அவர் கவனித்தார்.
அவனுக்கு நல்லறிவு புகட்ட எண்ணினார்.
ஒருமுறை அவனது அறைக்குள் சென்றார்.
அங்கேப் புத்தம் புதிய வீணை ஒன்று இருந்தது.
“சீடனே! இந்த வீணையை இசைக்க ஆசையாக இருக்கிறது. மீட்டட்டுமா!” என்றார் புத்தர்.
“தங்கள் கைபட என் வீணை என்ன புண்ணியம் செய்ததோ! புத்தபிரானே! தங்கள் திருக்கரங்களால் இசைப்பதைக் கேட்க நானும் ஆவலாய் உள்ளேன்” என்றான் அவன்.
புத்தர் வீணையை எடுத்து நரம்புகளை முறுக்கேற்றினார்.
ஒரு கட்டத்தில் மேலும் மேலும் திருக, சீடன் அவரிடம், “ஐயனே! இப்படி முறுக்கேற்றினால் நரம்பு அறுந்து விடுமே!” என்று பரபரப்புடன் சொன்னான்.
“அப்படியா?” என்ற புத்தர், நரம்புகளைத் தளர்த்த ஆரம்பித்தார்.
அது அளவுக்கதிகமாக தொய்வாகவே, “எம்பிரானே! இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே!” என்றான்.
புத்தர் வீணையை தரையில் வைத்தார்.
“சீடனே! நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும் வாழ்க்கையின் தத்துவம் புதைந்து கிடக்கிறது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும், தளர்த்தினால் ஒலி எழாது. இது போல்தான் கடுமையான பயிற்சியால் உடல் தளர்ந்து விடும். அடுத்து வேலை செய்ய முடியாது. குறைவாக உழைத்தாலோச் சோம்பலுக்கு இடமளிக்கும். எனவே, நிதானமாக எதையும் செய். சாதித்துக் காட்டுவாய்!” என்றார்.
பணியிலும், தொழிலிலும் நிதானம் வேண்டும், என்பதை அந்தச் சீடன் புரிந்து கொண்டான்.