குருசேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது வேலையாட்கள், போர் நடக்கும் இடங்களை, சுத்தம் செய்து கொண்டும், சமன் படுத்திக் கொண்டும், அங்கு உள்ள மரம் செடி கொடிகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டும், இருந்தனர்.
அப்போது ஒரு குருவி, அங்கு நின்று கொண்டிருந்த கிருஷ்ணரிடம் வந்தது.
“பகவானே,நேற்றுவரை அதோ அங்கிருக்கும் வெட்டப்பட்ட மரத்தில்தான் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பாற்றினேன். இன்றோ கூடின்றி தவிக்கிறேன், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கெஞ்சியது.
கிருஷ்ணரோஅதைக் கவனிக்காமல் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனிருந்த அர்ச்சுனனுக்கு மனம் வருத்தமானது.
அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத கிருஷ்ணர், “பார்த்தா அங்கே பார், இங்கே பார்” என ஏதேதோ வேலைகளைச் சொல்லிக் கொண்டே தேரில் ஏறிப் புறப்பட்டார்.
அர்ஜுன் முகம் வாடித் துயரமானது.
போகிற வழியில், கிருஷ்ணர் திடீரென்று தேரை நிறுத்தி, தமது வில் அம்புகளுடன் இறங்கி, தூரத்தில் சென்று கொண்டிருந்த, யானை ஒன்றின் கழுத்தில் தொங்கிய பெரிய மணியை குறி பார்த்து வீழ்த்தினார்.
மணி சத்தத்துடன் கீழே விழ, யானை பிளறிக்கொண்டு ஓட ஆரம்பித்தது.
அர்ச்சுனனுக்கு ஒன்றுமேப் புரியவில்லை.
“ஆயிரம் வேலைகளிருக்க, இது என்ன வெட்டி வேலை” என அவன் மனம் வாடியது.
சூரியன் மறையும் நேரம், வேலை முடிந்து அவரவர், தத்தம் இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
கிருஷ்ணரும்,அர்ச்சுனனும் தேரில் ஏறி அவர்களிடத்திற்குப் புறப்பட்டனர்.
வழியில் கிருஷ்ணரால் வீழ்த்தப்பட்ட அந்த மணி கிடந்தது.
“அர்ச்சுனா, அதோ அங்கு கிடக்கும் மணியை எடுத்துக் கொண்டு போய், தூரத்தில் தெரியும் பெரிய மரத்தின் அடியில், நிமிர்த்தி வைத்து விட்டு வா”என்று கிருஷ்ணர் கூறினார்.
அர்ச்சுனன் வேண்டா வெறுப்பாக, இது ஒரு வெட்டி வேலை எனும் நினைப்பில்,தேரிலிருந்து இறங்கி, அந்த மணியைத் தூக்க அதிர்ந்து போனான்.
ஆச்சர்யம் கலந்த திகைப்பில் உற்றுப் பார்த்த போது, அங்கு அந்தக் குருவி தன் குஞ்சுகளுடன் இருந்தது.
வியப்புடன் விழிகள் விரிய அவன் கிருஷ்ணரைப் பார்க்க, அவரோ, அர்த்தம் கூடிய புன்னகை செய்தார்.
அந்தப் புன்னகையின் பொருள் அவனுக்குப் புரிந்தது.
”வாழ்க்கையில் அவ்வப்போது, என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். நடக்கப் போவதைக் குறித்து, வருந்திக் காலத்தை வீணாக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்” என்பதே அது.