ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ”உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?” என்று கேட்டான்.
அதற்கு சனீஸ்வரன், ‘இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!’ என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
‘எங்கேச் செல்கிறீர்கள்?” என்று இந்திரன் கேட்க, ‘சிவனைத் தரிசிக்க!” என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
நேராகக் கைலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
”சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?” என்று கேட்டார் சிவபெருமான்.
”பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்” என்றார் சனீஸ்வரன்.
”எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா… விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையேப் பீடிக்கப் போகிறாயா?’ என்று கேட்டார்.
”ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்டார் சனீஸ்வரன்.
”ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது’ என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராட்சத்தில் போய் மறைந்து கொண்டார்.
ருத்ராட்சத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராட்சத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெருமான் ருத்ராட்சத்திலிருந்து வெளியே வந்தார்.
சனீஸ்வரனை நோக்கி, ”பார்த்தாயா சனீஸ்வரா… உன்னால் என்னை ஏழரை நாழிகை கூட நெருங்க முடியவில்லையே?” என்றார்.
”இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராட்சத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக் கொண்டு, அதை அனுபவித்தீர்கள்” என்றார்.
‘சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தில் தங்கி, தனக்கும் ருத்ராட்சத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.