சீனாவில் ‘ச்சூ’ என்ற மாநிலத்தில் மிகுந்த ஆற்றல் மிக்க அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஷோவாஸிக்ஸு. அவருடைய அறிவுத் திறன், ராஜ தந்திரம், தொலைநோக்கு ஆகியவற்றின் காரணமாக, அவரிடம் மற்ற நாடுகளின் அரசுகள் அல்லது அமைச்சர்கள் அஞ்சி கிடந்தனர். ஏன் உள்நாட்டிலும் கூட பலர் அவருக்குப் பயந்து வாய் மூடிக் கிடந்தனர்.
ஒருநாள் அரசன் தன் அமைச்சர் ஷோவாஸிக்ஸு குறித்து அரசவையில் பேச்சு எழுப்பினான்.
“நம் அமைச்சர் ஷோவாஸிக்ஸுவின் பெயரைக் கேட்டால் அண்டை நாடுகள் எல்லாம் அஞ்சி நடுங்குகின்றன. ஏன், நம் நாட்டில் கூட அவர் பெயருக்கு பெரிய மதிப்பும் அச்சமும் காட்டுகிறார்கள். உண்மையிலேயே அவருக்கு இப்படியோர் பெயர் உள்ளதா?”
அரசவையில் இருந்த அமைச்சர் குழுவிலிருந்தும் சரி, பிரதானிகள் பக்கமிருந்தும் சரி; யாரும் அதனை ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லை.
அரசன் அந்த அமைச்சரின் மேல் உள்ள அபிமானத்தால் அதைக் கேட்கிறானா, அல்லது எரிச்சலுற்றுக் கேட்கிறானா என்று தெரியாமல் கேள்விப்பொறியில் சிக்கிக் கொள்ள யாருக்கும் துணிவில்லை.
‘ஜியான்ங்ஈ’ என்ற அமைச்சர் மன்னரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று நெடுங்காலமாகக் காத்திருந்தார். அந்தத் தருணத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்தார்.
அவர் எழுந்து, “மன்னர் பிரானே! அந்த அமைச்சர் மேல் பக்கத்து நாடுகளும், மக்களும் கொண்டிருக்கின்ற மதிப்பு எப்படி என்பதை ஒரு கதை மூலமாக உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்” என்றான்.
“என்ன அது, சொல்வீர்!” என்றான் மன்னன்.
ஒரு முறை நரி, புலியிடம் மாட்டிக்கொண்டது. தப்பிக்கும் வழி நரிக்குப் புலப்படவில்லை. எனவே ஓர் உபாயம் செய்தது.
“யோவ்... புலியே... என்ன தைரியம் இருந்தால் என்னைக் கொல்லத் துடிப்பாய்?” என்று தலையை நிமிர்த்திக் கேட்டது.
புலிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் உன்னைப் பிடித்துக் கொல்லக்கூடாது?” என்று திருப்பிக் கேட்டது.
நரி தன் குரலை மேலும் உயர்த்திக் கொண்டு, “உன்னிடம்தான் சொல்லவேண்டும். கடவுள் என்னை இந்தக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் ராஜாவாக நியமித்திருக்கிறார். நீ என்னைக் கொன்றால் அவ்வளவுதான், கடவுளுக்கு எதிரி ஆகிவிடுவாய்... உன்னைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார்” என்றது.
புலி சந்தேகத்துடன் பார்ப்பதைக் கண்டதும் நரி சொன்னது.
“சரி... நீ நம்ப வேண்டுமானால் இந்தக் காடு முழுவதும் போவோம். என்னைப் பார்த்தவுடன் எல்லா மிருகங்களும் பயபக்தியோடு ஒதுங்கி கொள்வதை நீயேப் பார்க்கலாம்” என்றது.
இருவரும் கிளம்பிக் காட்டுக்குப் போனார்கள்.
நரி திமிருடன் நடந்துசென்றது. ஆங்காங்கே இருந்த மிருகங்கள் நரியைப் புலியிடன் பார்த்ததால் நடுக்கத்துடன் ஓடி ஒளிந்து கொண்டன.
“பார்த்தாயா புலியாரே! என்னைப் பார்த்தால், இவையெல்லாம் எப்படி ஓடுகின்றன... என்ன மரியாதை? என் எதிரில் இருக்கக் கூடத் தயக்கம், அச்சம்! இப்பொழுதாவது புரிகிறதா? என்னிடம் நீ வாலாட்டினால் உன் கதை முடிந்தது” என்றது நரி.
பயந்து போய் நரியை விட்டு விலகி தன் வழியில் சென்றது புலி.
“இப்படித்தான் அரசே, உங்கள் கீழ் உள்ளதால் உங்களை நினைத்தே அனைவரும் அந்த அமைச்சருக்கு அஞ்சுகிறார்கள். உங்களது ராஜ தந்திரம், வீரம், விவேகம், ஆற்றல் ஆகியவற்றைக் கண்டுதான் உண்மையில் அவர்களுக்கு அச்சம்” என்றார் அந்த அமைச்சர்.