ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.
ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது. தொடர்ந்து புத்தரை நோக்கி, “புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால், எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்” என்றான்.
பின்னர் அவனே, “தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றான்.
மௌனமாக சிரித்த புத்தர், “இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
அந்தக் கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது.
புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது. நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல், தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
தோல்விகள் தழுவும்போது, “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.