சோழன் நடத்திய விருந்தில் கம்பர், அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் பங்கேற்றனர். அம்பிகாபதியும், சோழனின் மகள் அமராவதியும் காதல் கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு பரிமாற அமராவதி உணவுடன் வந்தாள்.
அப்போது அம்பிகாபதி, ''இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய....'' எனப் பாடினான்.
அதாவது, ''சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே'' என்றான் அம்பிகாபதி.
இது கேட்டு சோழன் கோபம் கொண்டான்.
கம்பர் சரஸ்வதியை தியானித்தபடி, ''கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்'' எனப் பாடலை முடித்தார்.
அப்போது வீதியில், 'கிழங்கோ கிழங்கு'' என்று கூவிய படி பெண் ஒருத்தி சென்றாள்.
கிழங்கு விற்கும் அவள், சுமையால் பாதம் நோக நடப்பதை பாடல் தெரிவிப்பதாகக் கருதிய சோழன் சினம் தணிந்தான்.
அப்பெண் சரஸ்வதி தேவி என்பதை உணர்ந்த கம்பருக்கு கண்ணீர் பெருகியது.