பரமபக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று ஒரு நாள் சீதாப்பிராட்டிக்குத் தோன்றியது.
“குழந்தாய்! இன்றைக்கு உனக்கு என் கையால் சமைத்துப் போடுவேன். நீ இங்கேச் சாப்பிடு” என்றாள் ஜானகி.
ஹனுமானும் மிக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார்.
சீதை தன் தோழிமார்களுடன் சேர்ந்து பலவிதமான சாப்பாடுகள் தயார் செய்து வைத்தாள்.
அனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு த்வாதச நாமம் போட்டுக் கொண்டு, ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்து கொண்டார்.
சீதை தன் தோழிமார்களுடன் சேர்ந்து சமைத்து வைத்த உணவைப் பரிமாறினாள்.
அனுமானோ போடப் போடச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்.
சீதை சமைத்ததெல்லாம் தீர்ந்துவிட்டது.
சீதைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு ஒன்றுமில்லை.
அனுமானோ, உணவைப் போடுங்கள் என்றார்.
அந்த வேளையில், லட்சுமணன் அங்கு வந்தார்.
அனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றார் சீதை.
“அடாடா! அவருக்குப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்தச் சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு த்ருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு, ஒரு துளசி இலையில், சந்தனத்தால் ராம நாமத்தை எழுதி, அவர் இலையில் கொண்டு போட்டார் லக்ஷ்மணன்.
அனுமனும் அதைச் சாப்பிட்ட பின்பு, பெரிய ஏப்பம் விட்டவாறே எழுந்து போனார்.