”ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
நான் எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்...”
விடுகதை போன்று இருக்கும் இந்தப்பாடல் வழியாகச் சொல்லப்படும் கதை என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா?
தெரியவில்லை என்பவர்கள், கீழேயிருப்பதை முழுமையாகப் படித்து, பொருள் அறிந்து கொள்ளுங்கள்...!
விடை இதுதான்:
ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவள் விருப்பத்தை அறிந்து அவளைத் தனிமையில் சந்திக்க விரும்பினான். அவளோ அவளுடைய தந்தையோடு தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய தந்தைக்குத் தெரியாமலும் தெருவிலுள்ள பிறர் அறியாமலும் அவளோடு உரையாட நினைத்தான். அவன் நடந்து கொண்டே அவளிடம் நிகழ்த்தின உரையாடலே மேற்கண்ட பாடல் சொல்லும் கதை.
ஒரு மரம் ஏறி - மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி - சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து - (வயதானவராகையால்) மர ஊன்று கோலைப் பிடித்து
ஒரு மரம் வீசி - பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான். அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள். அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.