கடவுள், தான் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் சமமான அளவிலேயேக் கருணை காட்டுகிறார்’ என்று ஒரு பாதிரியார் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன் மகனுக்குப் போதித்து வந்தார்.
ஒரு நாள்.
இயற்கை அழகு சூழ்ந்த ஒரு குளத்துக்குத் தன் மகனுடன் சென்றார்.
கரையில் நின்றவாறு, “அதோ, அந்த நாரையைப் பார். நீரில் நீந்துவதற்கு ஏற்ற வகையில் நீண்ட கால்கள். அது தன் கால்களைத் தண்ணீருக்குள் அமுக்கும் போதும், வெளியே இழுக்கும் போதும், கொஞ்சமும் சத்தம் எழாததைக் கவனி. இதனால் ஓசைப்படாமல் அதனால் மீனை நெருங்க முடிகிறது. அதை வேட்டையாடவும் முடிகிறது. அதனுடைய நீண்ட மூக்கு, எட்ட இருந்து கொண்டே ‘விருக்’கென மீனைக் கொத்தி எடுத்து விழுங்க உதவுகிறது. கடவுள் உயிர்களை எத்தனை புத்திசாலித்தனமாகவும், அருள் உள்ளத்தோடும் படைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம். உயிர்களின் மீதான கடவுளின் அளப்பரிய அன்பை இப்போது புரிந்து கொண்டாய் அல்லவா?” என்றார் தன் மகனிடம்.
மகன் சொன்னான்:
“புரிகிறது தந்தையே. ஆனால், ஒரு சந்தேகம். நாரைக்குக் கருணை காட்டிய கடவுள், மீனுக்கு அதைக் காட்டாமல் நாரையின் பசிக்கு இரையாக்கியிருக்கிறாரே, இது பாரபட்சம் அல்லவா?”
விடை தெரியாமல் விழித்தார் பாதிரியார்.