மிகவும் பக்திமயமான தகப்பனார் ஒருவர், தன் மகனை மிக ஒழுக்கமாக வளர்த்து வந்தார்.
ஒரு நாள் அவர்கள் தேவாலயத்திற்குப் போகும் போது, அவர் தன் குழந்தையிடம் இரண்டு நாணயங்களைக் கொடுத்தார். ஒன்று பத்து ரூபாய் நாணயம், மற்றொன்று ஒரு ரூபாய் நாணயம்.
தேவாலய நன்கொடைப் பெட்டியில் மகனுக்கு எது விருப்பமோ அந்த நாணயத்தைப் போடலாம் என்று அனுமதியும் கொடுத்தார்.
மகன் பத்து ரூபாய் நாணயத்தைத்தான் பெட்டியில் போடுவான் என்று தந்தை எதிர்பார்த்தார்.
அப்படித்தான் அவன் வளர்க்கப்பட்டிருந்தான். தகப்பனார் காத்திருந்தார்.
கூட்டம் கலைந்ததும் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தார்.
பையனைக் கேட்டார், “நீ என்ன செய்தாய்?”
பையன், பத்து ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தையேத் தான் பெட்டியில் போட்டதாகச் சொன்னான்.
தந்தையால் நம்ப முடியவில்லை.
“ஏன் நீ இப்படிச் செய்தாய்? நான் உனக்கு எப்பொழுதும் உயர்ந்த கோட்பாடுகளைத்தானேக் கற்று கொடுத்தேன்” என்றார் தந்தை.
அதற்குப் பையன் சொன்னான், “பாதிரியார் பேசும் போது, கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனை நேசிக்கிறார் என்றார். என்னால் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டுமே மகிழ்ச்சியாகக் கொடுக்க முடிந்தது. பத்து ரூபாய் நாணயத்தை அல்ல”