ஒரு மீனவன் இருந்தான்.
அவன் பலமுறை வலைவீசிப் பார்த்தும், குளத்தில் இருந்த மீன்களை அவனால் பிடிக்க முடியவில்லை.
அவன் வலை வீசியதுமே அவனைச் சுற்றி இருந்த தண்ணீர் பகுதியிலிருந்து மீன்கள் விலகிச் சென்றன. இதைப் பார்த்து மீனவன் ஆச்சரியப்பட்டான்.
மற்றொரு நாள் மீனவன் குளத்திற்குச் சென்றான்.
அப்போது அவன் குளத்தில் காவி யுடை அணிந்த துறவி ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதையும், அவரைச் சுற்றி இருந்த நீரில் மீன்கள் விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான்.
'காவி ஆடைதான் மீன்களைக் கவர்ந்திழுக்கிறது!' என்று நினைத்த மீனவன், மறுநாள் காவி ஆடை அணிந்து நீரில் இறங்கினான். அப்போது மீன்கள் அவன் அருகில் வந்து விளையாடின.
அதைப் பார்த்ததும், 'சந்நியாசியாக வேஷம் போட்டதற்கே இத்தகைய பலன் கிடைக்கிறது என்றால், உண்மையிலேயே நான் சந்நியாசி ஆகிவிட்டால் எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நன்மைகள் எனக்குக் கிடைக்கும்!' என்று மீனவன் எண்ணினான்.
இந்த எண்ணம் அவன் மனதில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அதனால் அவன் அறநெறிகளைப் பின்பற்றி வாழ ஆரம்பித்தான். பின்னர் ஒரு மகானாகவும் ஆனான்.
உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும்.