மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறு பொய்யாவது பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும். ஆனால், அரிச்சந்திரன் மட்டும் சத்தியம் தவறாதவராக, பொய் சொல்லாதவராக திகழ்ந்ததற்கான காரணத்தை ஸ்ரீதேவி பாகவதம் சொல்கிறது.
அரிச்சந்திரனுக்கு குழந்தை இல்லை. அதனால் குல குருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி வருணனை நோக்கித் தவம் செய்தான். அரிச்சந்திரனின் தவத்தில் மகிழ்ந்த வருண பகவான், 'உனக்கு குழந்தைப் பேற்றைத் தருகிறேன். ஆனால் அந்தக் குழந்தையை, யாகத்திற்குப் பலியாகத் தருவாயா...?'எனக் கேட்டார்.
'பகவானே... மலடன் என்கிற பெயர் நீங்கினால் போதும். நீங்கள் சொன்னபடியேச் செய்கிறேன்...' என்றான் அரிச்சந்திரன்.
வருண பகவான் அருளால் அரிச்சந்திரனுக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
உடனே, வருண பகவான் வந்து விட்டார். 'அரிச்சந்திரா... நீ சொன்னபடி, உன் பிள்ளையை யாகம் செய்து, பலி கொடு...' என்றார்.
அரிச்சந்திரன் திகைத்துப் போனார்.
பிள்ளையை இழக்க, யாருக்குத்தான் மனம் வரும்? அதனால், 'சுவாமி... தீட்டுக் கழிய ஒரு மாதம் ஆகும். தீட்டோடு யாகம் நடத்தக் கூடாது. ஆகையால், ஒரு மாதம் கழித்து வாருங்கள்...' என்றான்.
பிறகு ஒரு மாதம் கழித்து வருண பகவான் அரிச்சந்திரனின் முன்னாள் வந்தார். குழந்தையைப் பலி கேட்டார். அரிச்சந்திரனால் கொடுக்க முடியவில்லை.
அதன்பின், குழந்தைக்குப் பல் முளைக்கட்டும் கர்ப்ப கேசம் களைய (முடி இறக்க) வேண்டும் உபநயனம் (பூணூல்) ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மகனுக்கு பதினொன்று வயது ஆகும் வரை, அரிச்சந்திரன் யாகமேச் செய்யவில்லை.
ஓரளவிற்கு வளர்ந்து விட்ட அந்தப் பிள்ளை விவரமறிந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் காட்டிற்குள் ஓடி விட்டான்.
வருண பகவான் வந்து நின்றார். உண்மையைச் சொல்லி, மன்னிப்பு கேட்டார் அரிச்சந்திரன்.
கொடுத்த வாக்கை அரிச்சந்திரன் காப்பாற்றததால், வருண பகவான் சாபம் கொடுத்து விட்டார்.
பின்பு வசிஷ்டரின் ஆலோசனைபடி, அரிச்சந்திரன் அந்தச் சாபத்திலிருந்து விடுதலையானான்.
சாபத்தில் இருந்து விடுபட்ட அரிச்சந்திரன் 'இனிமேல், உயிரேப் போனாலும், சத்தியம் தவற மாட்டேன்...’ என்று சத்தியம் செய்தான்.
அதன்பின் நடந்த கதைதான் நம் அனைவருக்கும் தெரியுமே!
தீயப் பழக்க, வழக்கங்களை விட்டு விலகி நிற்பது கடினம். அதே போல, நல்லவைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருப்பது மிகமிகக் கடினம். அவ்வாறு கடைப்பிடித்தால் நிலைத்தப் புகழை அடையலாம் என்பது அரிச்சந்திரன் வரலாறு விளக்கும் உண்மை.