துறவி ஒருவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். "நல்ல நண்பர்கள் பழைய பிறவித் தொடர்பால் அமைகிறார்கள். நல்ல நண்பர்களைப் பெற வழி ஏதும் இல்லை. ஆனால் பகைவர்களைப் பெறுவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது” என்றார்.
கூட்டத்தில் இருந்த இளைஞன் ஒருவன், “பகைவர்களை எளிதாகப் பெற வழி இருக்கிறதா? அந்த வழி என்னவென்று சொல்லுங்கள்? நாங்கள் அந்த வழியில் செல்லாமல் இருப்போம்" என்றான்.
புன்முறுவல் பூத்த அவர், “இளைஞனே! உலகத்திலேயே சிறந்த ஒழுக்கம் அடக்கம்தான். தன்னை எவன் தாழ்த்திக் கொள்கிறானோ, அவன் உயர்த்தப்படுவான். தன்னை எவன் உயர்த்துகிறானோ, அவன் தாழ்த்தப்படுவான். பகைவர்களைத் தேடி ஒருவன் எங்கும் அலைய வேண்டாம். தன் நண்பர்கள் முன்னிலையில் தான் அவர்களை விட உயர்ந்தவன் என்று காட்டிக் கொண்டால், அதுவேப் போதும். நாளடைவில், அந்த நண்பர்கள் அவனுக்குப் பகைவர்களாக மாறி விடுவார்கள்” என்று விளக்கம் தந்தார்.