ஒரு கிராமத்தில் இரண்டு துறவிகள் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் சிறந்த தபஸ்விகள். அவர்களை அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் பெரிதும் போற்றி, அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தனர்.
எப்போதும் தியான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அந்தத் துறவிகள், அவ்வப்போது அக்கிராம மக்களுக்கு நல்லுரை வழங்கி வந்தனர்.
துறவிகளில் ஒருவர் வயதில் மூத்தவர். மற்றொருவர் இளையவர்.
இருவரும் இரவில் நீண்ட நேரம் தியானம் செய்வது வழக்கம்.
அவர்கள் நடுநிசியையும் தாண்டி தியானம் செய்வார்கள்.
இருவரும் கிராமத்துக்கு வெளியில் தனித்தனி ஆசிரமங்களில் வாழ்ந்து வந்தனர்.
அது மின்சாரம் இல்லாத காலம். இரவு வெகு நேரம் விழித்திருப்பதற்கு வெளிச்சம் வேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர்.
அந்த நாட்டில் இறைவழிபாடு செய்யும் போது, ஆலிவ் எண்ணெய் ஊற்றிய விளக்குகளைப் பயன்படுத்துவது வழக்கம்.
துறவிகள் இருவரும் அதிக நேரம் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்ததால் அதிக எண்ணெய் தேவைப்பட்டது.
எண்ணெய்க்கு அடிக்கடி கிராம மக்களை ஏன் தொல்லை செய்ய வேண்டும்? நாமே எண்ணெய்க்கு வழி செய்து கொண்டால் என்ன?' என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.
அதன்படியே இருவரும் தங்கள் ஆசிரமத்தில் ஆலிவ் மரங்களை வளர்க்கத் திட்டமிட்டனர். 'மரம் வளர்ந்த பிறகு தேவையான எண்ணெயை அதிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம்!" என்பது அவர்களின் எண்ணம்.
ஒரு நாள் இரவு வழக்கம் போல் மூத்த துறவி இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் எண்ணெய்க்காக ஆலிவ் மரம் வளர்க்க இருக்கும் தனது திட்டத்தை இறைவனிடம் தெரிவித்தார்.
அதற்கு, “சரி, ஓர் ஆலிவ் கன்றை நட்டு வளர்க்கவும்” என்று இறைவனின் குரல் அசரீரியாகக் கேட்டது.
அதோடு ஓர் ஆலிவ் கன்றும் அவர் முன்பு வந்து விழுந்தது. அந்தக் கன்றை மூத்த துறவி ஈசனின் ஆணையின்படியே தனது ஆசிரமத்தைச் சுற்றியிருந்த திறந்த வெளியில் நட்டு, அதை ஆசையோடு வளர்க்க ஆரம்பித்தார்.
அவர் தினந்தோறும் ஆலிவ் கன்றுக்குத் தண்ணீர் ஊற்றி, தேவையான உரமிட்டு, அதன் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.
மூத்த துறவி செய்தது போலவே இளைய துறவியும் ஒருநாள் இரவு இறைவனிடம் விண்ணப்பித்தார்.
அவருக்கும் இறைவன் ஓர் ஆலிவ் கன்றைத் தந்தார். அதை இளைய துறவி தனது ஆசிரமத்தில் நட்டார்.
சில மாதங்கள் சென்றன. இளைய துறவியின் ஆலிவ் கன்று நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், மூத்த துறவியின் ஆலிவ் கன்று வாடி, பட்டுப் போகத் தொடங்கியது.
அதனால் மூத்த துறவி மனம் வருந்தினார்.
அவர், 'எவ்வளவு அக்கறையோடு இதை வளர்க்க ஆரம்பித்தேன்! ஆனால், பயனில்லாமல் கன்று இப்படி வாடி பட்டுப் போகத் தொடங்கிவிட்டதே! என் முயற்சியெல்லாம் வீணாகிவிட்டதே!' என்று தனக்குள் அடிக்கடி நினைத்து மனம் வருந்தினார்.
ஆனால் அதே சமயம் இளைய துறவி நட்ட ஆலிவ் கன்று நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது.
அதைப் பார்த்த மூத்த துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆதலால் அவர், 'அதன் ரகசியத்தை இளைய துறவியிடமேக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று நினைத்தார்.
மூத்த துறவி இளைய துறவியை அணுகி, "தம்பி! நான் எவ்வளவோ அக்கறை எடுத்துக் கொண்டு, என் ஆலிவ் கன்றை வளர்த்தேன். அதன் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன். அதை மிகவும் நல்ல முறையில் நான் பராமரித்தும் அது பட்டுப் போய்விட்டது. ஆனால், அதே சமயம் உனது ஆலிவ் கன்றோ மிகவும் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மர்மம் என்ன?” என்று வினவினார்.
அதற்கு இளைய துறவி, “அண்ணா! நான் கன்றை நட்டதோடு சரி. அதற்குத் தினமும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போது தண்ணீர் ஊற்றுவேன். அவ்வளவுதான். ஆனால், அந்தக் கன்றை நட்ட போதே அதை நான் இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன். 'இறைவா! இதன் வளர்ச்சியை நீயேக் கவனித்துக் கொள். இந்த உலகில் அனைத்தும் உன் ஆணைப்படியே நடக்கின்றன. இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? நான் என் பணியைச் செய்வேன், அவ்வளவுதான்! மற்றதை நீயேப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றேன். அவ்விதம் நான் மரத்தை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டேன். அவன் கவனித்துக் கொள்கிறான். மரமும் நன்கு வளர்கிறது. அவ்வளவு தான்" என்றார்.
அதைக் கேட்ட மூத்த துறவி தன் நிலையை நினைத்து வருந்தினார். 'இவ்வளவு நாட்கள் தவம் செய்தும், இவ்வளவு வயதாகியும், என் சகோதரத் துறவிக்கு இருக்கும் இந்த மன நிலை எனக்கு வர வில்லையே! என்ன பயன்? என் சிந்தனையெல்லாம் மரத்தின் வளர்ச்சியிலேயே இருந்ததே தவிர, இறைவனிடம் இல்லையே! அதே சமயம் என் அன்பு சகோதரனோ தன் பணியைச் செய்துவிட்டு, சிந்தனையெல்லாம் இறைவனிடமே வைத்திருந்தான், பயனைக் கருதாமல் செயல் மட்டும் புரிந்தான்; பயனை இறைவனிடமே ஒப்படைத்துவிட்டான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அறிந்திருந்தும், அதை நான் நடைமுறையில் கொண்டு வரவில்லையே! என்று நினைத்து மனம் வருந்தினார்.
பிறகு அவர் இளைய துறவியிடம் தனது நிலையை விளக்கி, “தம்பி, நீ இன்று என் அகக்கண்களைத் திறந்துவிட்டாய். உனக்கு எப்படி நன்றி செலுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று நாதழுதழுக்கக் கூறிவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.
"இந்த உலகில் அனைத்தும் இறைவன் திட்டமிட்டபடியேத்தான் நடக்கிறது. நீ உன் கடமையைச் செய்; பயனைப் பற்றி நினைக்காதே" என்று
- இத்தாலி நாட்டுக் கதை