ஊரில் வயலில் உழுது பாடுபடும் விவசாயி ஒருவன் இருந்தான்.
அவன் தினமும் காலையில் வேலைக்குப் போகும் போது, மரத்தடியில் அமர்ந்து ஓவியம் தீட்டும் ஓவியர் ஒருவரைப் பார்ப்பது வழக்கம்.
கடுமையாக உழைத்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது விவசாயி, சில சமயம் ஓவியர் அதே இடத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பதையும் பார்ப்பான்.
அப்போதெல்லாம் விவசாயி, 'என்ன இது? மக்களுக்காக நான் இவ்வளவு உழைத்துப் பாடுபடுகிறேன்! இந்த ஓவியர் இப்படி சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே?' இவரால் நமது கிராமத்து மக்களுக்கு என்ன பயன்? என்று நினைப்பது வழக்கம்.
அறுவடை காலம் வந்தது. உழவன் அறுவடை செய்து முப்பது மூட்டை நெல்லை விலைக்கு விற்பதற்கு வண்டியில் ஏற்றி நகரத்திற்கு எடுத்துச் சென்றான்.
அப்போது நகரத்தில் கோலாகலமாக ஒரு பெரிய விழா நடந்துகொண்டிருந்தது.
அந்த விழாவில் உழவன், தான் தினந்தோறும் பார்த்து, 'சோம்பேறி' என்று நினைத்து வந்த ஓவியரை நகரத்து மக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உட்கார வைத்து, ஊர்வலமாக அழைத்து வருவதைப் பார்த்தான்.
ஆவலுடன் உழவன் பக்கத்தில் இருந்த வியாபாரியிடம், "இங்கே என்ன நடக்கிறது? எதற்காக இவருக்கு இவ்வளவு மரியாதை?” என்று விசாரித்தான்.
அதற்கு வியாபாரி, “உனக்குத் தெரியாதா? இந்தப் பிரபல ஓவியர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர்தானே? இவர் வரைந்த சிறந்த ஓவியத்திற்காக அகில இந்திய ஓவியக் கண்காட்சியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது! என்வே, இவரால் உங்கள் ஊருக்கேப் பெருமை! அருகில் உள்ள எங்களுக்கும் பெருமை!" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
"நான் வருடத்தில் சில மாதங்களே உழைத்து 30 மூட்டைகள் நெல்லை அறுவடை செய்தேன். அது ஒரு சிலருக்கு உணவாக அமைந்தது. இந்த ஓவியரோ, சில நாட்கள் ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்து ஓவியம் உருவாக்கினார். அது இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பெருமை தருகிறது, இந்த நாட்டுக்கும், பிறந்த ஊருக்கும் பெருமைத் தேடித் தந்திருக்கிறது! இவரைப் போய் நான் 'சோம்பேறி' என்று நினைத்தேனே! என்னுடைய எண்ணம் எவ்வளவு தவறானது!' என்று அந்த விவசாயி நினைத்தான்.
தவயோகிகளும், முற்றும் துறந்த சந்நியாசிகளும் குகையிலும் தனிமையிலும் அமர்ந்து தியானம் செய்யும் போது, "அவர்கள் உழைத்துச் சேவை செய்யாமல் இருக்கிறார்கள்!” என்று பலர் நினைக்கக்கூடும். ஆனால், உண்மை என்னவென்றால், மகான்களின் தியானமும், தவமும், தர்மத்தைச் செழிக்க வைத்து நல்லவர்களை ஊக்குவித்து, நாட்டுக்குப் பெரும் நன்மை செய்கிறது என்பதை நாம்தான் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.