ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்து கொள்ள முயன்று வந்தார்.
ஆனால், அந்தக் குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது. அதனால் மனம் வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார்.
ஆனால், அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது.
அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார்.
அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துகளைப் பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினார்.
அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி, “குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று முடிவு செய்தார்.
அவருடன் சென்று விட முடிவு செய்தார்.
அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.
பேசி முடித்த அந்தப் புதிய துறவி, அருகேயிருந்த குருவிடம், “தனது பேச்சு எப்படி இருந்தது?” என்று சிறிது கர்வத்துடன் கேட்டார்.
கண் விழித்த அந்த குரு, “நீ எப்போது பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இரண்டு மணி நேரமாக நீ பேசாமல் அமர்ந்து கொண்டிருக்கிறாயே?” என்றார்.
“அப்படியானால், இதுவரை பேசியது யார்? என்று அந்தப் புதிய துறவி கேட்டார்.
“சாஸ்திரங்கள் பேசின, நீ படித்த புத்தகங்கள் பேசின, நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே“ என்று குரு சொன்னார்.
இப்படித்தான் பலரும் தாங்கள் மற்றவரிடமிருந்து கேட்ட, கற்ற விஷயங்களை மட்டுமேப் பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப் பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது என்பதை உணர வேண்டும்.