ராமர் நாட்டை ஆண்டு கொண்டிருந்த போது ஒரு நாள் லட்சுமணனைப் பார்த்து, “லட்சுமணா! யாராவது நீதி கோரி நமது அவைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டிருக்கிறார்களா? பார்” என்று சொன்னார்.
லட்சுமணன் வெளியே சென்று நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தான். யாரையும் காணவில்லை.
எனவே உள்ளே வந்து, “பிரபோ! உங்களிடம் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி நியாயம் கேட்க வந்துள்ள யாரையும் நான் காணவில்லை” என்று சொன்னான்.
அதற்கு ராமர், “அரசன் நீதியோடும் நேர்மையோடும் அரசு புரிந்தால்தான் மக்கள் நல்ல வழியில் செல்வர். ஆகவே இது விஷயமாக அரசன் மிக்க விழிப்புடன் இருக்க வேண்டும். ஆகவே மீண்டும் ஒரு நடை சென்று யாராவது என்னிடம் நியாயம் தேடி வந்திருக்கிறார்களா என்று பார்” என்று சொன்னார்.
லட்சுமணன் மீண்டும் வெளியே சென்றான். அவன் அங்கு மனிதர் யாரையும் காணவில்லை. ஆனால், ஒரு நாய் மட்டும் மிகவும் வருத்தத்துடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.
லட்சுமணனுக்கு மிருகங்கள், பறவைகள் இவற்றின் மொழி தெரியும். ஆகவே நாயின் மொழியில், “ஏ நாயே! ஏன் இத்தனை வருத்தத்துடன் காணப்படுகிறாய்? உனக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டிருந்தால் என்னவென்று தைரியமாகச் சொல்” என்றான்.
“ஐயா, நான் அரசர் ராமனைக் கண்டு என் குறையைச் சொல்ல வேண்டும்” என்று நாய் சொல்லிற்று.
உடனே லட்சுமணன் அவையில் வீற்றிருந்த ராமரிடம் சென்று, “ஒரு நாய் தங்களைக் காணக் காத்திருக்கிறது. அது தங்களிடம் ஏதோ முறையிட வேண்டுமாம்” என்று தெரிவித்தான்.
“அதை உள்ளே வரச்சொல்” என்றார் ராமர்.
ஆனால் லட்சுமணன் நாயை உள்ளே வரும்படி அழைத்ததற்கு, அது உள்ளே வர மறுத்தது. “ஐயா, கோயில், அரச சபை, அந்தணர்கள், அக்கினி, இந்திரன், வருணன், சூரியன் ஆகிய தேவர்கள் வசிக்கும் இடங்கள் இவற்றுக்கு என் குலத்தவர் செல்வது தகாது. ஆகவே ராமர் கட்டளையிட்டாலன்றி நான் உள்ளே வரக்கூடாது” என்று நாய் சொல்லியது.
லட்சுமணன் இதை ராமரிடம் சொல்ல, “நான் கட்டளையிட்டதாகச் சொல்லி, அதை அழைத்து வா” என்று சொன்னார் ராமர்.
லட்சுமணன் நாயை உள்ளே அழைத்து வந்தான்.
நாயைப் பார்த்த ராமர், “உன் குறை என்ன என்று சொல். என்னிடம் நியாயம் கேட்க உனக்கு முழு அதிகாரம் இருக்கிறது. என் அரசாங்கத்தில் என்னை வந்து நியாயம் கேட்பதற்கும் மனிதர்களுக்கு எத்தனை உரிமை உண்டோ அத்தனை உரிமை என் அரசாங்கத்திலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் உண்டு” என்று சொன்னார்.
அப்பொழுதுதான் நாயின் தலையில் யாரோ அடித்துக் காயப்படுத்தியிருப்பதை ராமர் கவனித்தார்.
நாய் அவரைப் பார்த்து, “பிரபுவே! குடிமக்களைக் காப்பாற்றுகிறவன் அரசன்தான். பிரஜைகள் தூங்கும் சமயத்தில் தான் விழித்துக் கொண்டிருந்து, அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றுகிறவனும் அரசன்தான். ஆகவே, எனக்கு நேர்ந்த கஷ்டத்தைத் தங்களிடம் சொல்கிறேன், கேட்க வேண்டும். சர்வார்த்தசித்தன் என்ற அந்தணர் இருக்கிறார். அவர் பிட்சை வாங்கித் தம் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் ஒரு காரணமுமின்றி என் தலையில் அடித்துவிட்டார்” என்றது.
உடனே ராமர் அந்த அந்தணரை அழைத்து வரச் சொன்னார்.
அந்தணர் வந்ததும் ராமர் அவரைப் பார்த்து, “நீங்கள் ஏன் இந்த நாயை அடித்தீர்கள்? உங்கள் கோபம் காரணமாகத்தான் இந்தப் பாவத்தைச் செய்தீர்கள் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார்.
உடனே அந்தணர், “நீங்கள் சொல்வது உண்மைதான், அரசே! பிட்சை வாங்குவதற்காக நான் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு இன்று பிட்சை கிடைக்கவில்லை. பசி மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது இந்த நாய் வழியில் படுத்திருந்தது. இதை நகரும்படி சொன்னேன். இது நகரவில்லை. ஆகவே, கோபத்தினால் கையிலிருந்த கழியால் இதன் தலையில் அடித்தேன். நான் செய்தது குற்றம்தான். ஆகவே அதற்கு உரிய தண்டனையைக் கொடுங்கள். நீங்கள் என்னைத் தண்டித்தால்தான் அந்தப் பாவம் என்னை விட்டு விலகும்” என்று சொன்னார்.
உடனே ராமர் சபையோர்களைப் பார்த்து, “இந்த அந்தணருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று கேட்டார்.
சபையோர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது, நாய், “நான் சொல்லலாமா, இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாமென்று?” என்று கேட்டது.
“சொல்” என்று ராமர் சொல்ல, அதற்கு அந்த நாய், “இவரை ஒரு மடாதிபதியாகச் செய்துவிடுங்கள்” என்று கூறியது.
உடனே ராமர் அந்த அந்தணரை மடாதிபதியாக்கி, அவருடைய மடத்திற்கு அனுப்பி வைத்தார்.
“மடாதிபதியாவது எப்படித் தண்டனையாகும்?” என்று சபையோர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த போது நாய், “நான் போன ஜன்மத்தில் ஒரு மடாதிபதியாகத்தான் இருந்தேன். மடாதிபதியாக இருந்த பொழுது தேவர்கள், துறவியர், குழந்தைகள், பெண்கள், பிராமணர்கள், ஏழை எளியவர் போன்றவர்களுக்காகக் கொடுக்கப்படும் பணத்தை எனக்காகச் செலவழிக்கும் சங்கடம் நேரிட்டது. அந்தப் பாவத்தினால்தான் நான் நாயாகப் பிறந்துள்ளேன்” என்று சொல்லிற்று.