மகரிஷி வரதந்துவுக்குக் கௌத்ஸன் என்ற சீடன் இருந்தான். மகரிஷி அவனைத் தம் மகனைப் போலவே வளர்த்து வந்தார்.
கௌத்ஸன் குருவினிடம் கற்றுக் கொள்ள வேண்டிய எல்லாச் சாத்திரங்களையும் கற்றுக் கொண்ட பிறகு வீடு திரும்பினான்.
அதற்கு முன்பு அவருக்குக் குருதட்சணை கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்.
“உங்களுக்கு நான் என்ன குருதட்சணை கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான்.
தியாகசீலரான மகரிஷி அவனிடம் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.
“நீ சாத்திரங்கள் நன்கு பயின்றதே குருதக்ஷிணை கொடுத்த மாதிரி. எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்றார்.
இருந்தாலும் கௌத்ஸன் அவரை விடவில்லை. திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கேட்டான். “தங்களுக்குக் குருதட்சணை கொடுக்காமல் நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்றான்.
அவனுடைய வற்புறுத்தலைப் பொறுக்க முடியாமல் ரிஷி, “நீ என்னிடம் பதினான்கு வித்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறாய். ஒரு வித்யைக்கு ஆயிரம் பொற்காசுகள் வீதம் பதினான்காயிரம் பொற்காசுகள் கொடு” என்று சொன்னார்.
அதைக் கேட்டுக் கௌத்ஸன் துளியும் கவலைப்படவில்லை. அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு பாரதத்தை ஆட்சி புரிந்த அரசன் ரகுவினிடம் சென்றால், அவன் என்ன பொருள் கேட்டாலும் கொடுப்பான் என்பது அவனுக்குத் தெரியும்.
கௌத்ஸன் அரசனிடம் சென்றான். அரசன் செய்த அதிதி பூஜைகளை ஏற்றுக் கொண்டான். உடனே எழுந்து வெளியேச் செல்ல ஆரம்பித்தான்.
அதைக் கண்ட அரசன் ஆச்சரியமடைந்து, “அதிதியாக வந்த தாங்கள் என்னை ஒன்றும் கேட்காமல் போகிறீர்களே, ஏன்?” என்று கேட்டான்.
கௌத்ஸன், “அரசே! நான் உன்னிடம் பொருளைப் பெறுவதற்காகத்தான் வந்தேன். ஆனால் நீயோ விச்வஜித் யாகம் செய்து எல்லாப் பொருள்களையும் தானம் செய்துவிட்டாய் என்று தெரிகிறது. அதிதி பூஜைக்குக் கூட நீ மண்பாத்திரம்தான் வைத்திருக்கிறாய். நான் குருதட்சணைக்காகப் பதினான்காயிரம் பொற்காசுகள் கேட்க வந்தேன். உனக்கு மனக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை” என்றான்.
“ஓர் அதிதி என்னிடம் வந்து ஒன்றும் பெற்றுக் கொள்ளாமல் போவது என்பது கூடாது. மூன்று நாள் இங்கு இருங்கள். நீங்கள் கேட்டதை நான் கொடுக்காமல் அனுப்பமாட்டேன்” என்றான் அரசன்.
எல்லா அரசர்களும் அவரவர்கள் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டி விட்டதனால் இனி மேல் அவர்களைக் கேட்பது என்பது முடியாது. ஆகவே குபேரன் ஒருவன்தான் மீதி: அவன் மீதுதான் படையெடுக்க வேண்டும் என்று தீர்மானித்துத் தன் ரதத்தில் ஆயுதங்களையெல்லாம் எடுத்து வைக்கச் சொன்னான் ரகு.
அப்பொழுது பொக்கிஷ அதிகாரி ஓடி வந்து, “குபேரன் நம் பொக்கிஷத்தில் தங்கங்களாகக் கொட்டிக் கொண்டிருக்கிறான்” என்று சொன்னான்.
“அப்படியானால் அத்தனையையும் தாங்கள்தாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றான் அரசன் கௌத்ஸனைப் பார்த்து.
“எனக்கு வேண்டியவை குருதட்சணைக்காகப் பதினான்காயிரம் பொற்காசுகள்தாம், அதற்கு மேல் ஒரு பொற்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றான் கௌத்ஸன்.
“அப்படியானால் குபேரன் உங்களுக்காகக் கொடுத்த சுவர்ணத்தை நானும் எடுத்து க்கொள்வதற்கில்லை. ஆகவே மீதியை அந்தணர்களுக்கேக் கொடுக்கிறேன்” என்று சொல்லி, அந்தணர்களுக்குக் கொடுத்தான் ரகு.
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு தியாகம் செய்தவர்கள் ஒரு காலத்தில் நம் நாட்டில் ஏராளமாக இருந்தனர். இன்று...?