காஞ்சீபுரத்தில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பல விதவைகள் வந்தனர்.
“ஓ மாதா! ஏ பராசக்தி! எங்களுக்கு விரைவில் முக்தி அளி. நாங்கள் சம்சாரக் கடலில் அலைக்கழிக்கப்படுகிறோம்” என்று அவரகள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
அவர்கள் பல மாதங்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தனர்.
ஆலய அர்ச்சகர் அவர்களது பக்தியைச் சோதித்து அறிய விரும்பினார்.
ஒரு நாள் இரவு அவர் அம்பாள் சிலைக்குப் பின்னால் நின்று கொண்டார்.
அம்பாளின் தங்கக் கையைத் தமது கையில் மாட்டிக் கொண்டார். அந்தக் கையை அசைத்து, “முக்தி பெற விரும்புகிறவர்கள் இப்போதே என்னிடம் வாருங்கள்” என்று கூறினார்.
அவர்களில் எவரும் சிலையின் அருகில் செல்லத் துணியவில்லை.
“என் பேத்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே, இப்போது நான் எப்படி முக்தி அடைய முடியும்?” என்று ஒரு விதவைக்கு எண்ணம் தோன்றியது.
“என் மூத்த மகனுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே, நான் இன்னும் சிறிது காலம் கழித்து முக்தி அடைந்து கொள்ளலாம்” என்று மற்றொரு விதவை எண்ணினாள்.
ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு காரணம் கண்டுபிடித்தனர்.
இதுதான் உண்மையான நிலை. ஒருவரும் உண்மையிலேயே முக்தி பெற விரும்பவில்லை. பெரும்பாலான மக்களின் பிரார்த்தனையெல்லாம் உதட்டளவுப் பிரார்த்தனை. வழிபாடெல்லாம் போலி வழிபாடு என்பதாகவே இருக்கிறது.