ஒரிசாவில் கிருஷ்ணச்சந்திரன் என்ற சிற்றரசன் கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். இன்பத்தை அனுபவிப்பதே வாழ்வின் பயன் என்ற எண்ணத்தோடு அவன் நாட்களைக் கழித்து வந்தான்.
ஒரு நாள் அருகிலுள்ள கிராமத்தில் சில வேலைகளைக் கவனிக்க அந்த அரசன் சென்றிருந்தான். மாலையில் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
சாலையோரம் ஒரு முதியவர் தமது மகளுடன் சென்று கொண்டிருந்தார்.
மகள் தந்தையிடம், “அப்பா! பகற்பொழுது போய்விட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் வீட்டில் விளக்கு ஏற்றவில்லை. வீட்டில் இருள் சூழ்ந்திருக்கும். வாருங்கள், விரைவாகப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே தந்தையுடன் விரைவாகச் சென்று மறைந்தாள்.
இந்தச் சொற்கள் அனைவரும் இயல்பாகப் பேசக்கூடியதுதான்.
ஆயினும் அதைக் கேட்ட அரசன் கிருஷ்ணச் சந்திரனுடைய உள்ளத்தில் அவை பெரும் மாறுதலை ஏற்படுத்தின.
இன்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்த அரசனுக்கு அவற்றில் ஆழ்ந்த கருத்து இருப்பதாகத் தோன்றியது.
“அந்தச் சிறு பெண் கூறிய வார்த்தைகளில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது. என் வாலிபப் பருவம் கழிந்து விட்டது. வாழ்க்கையின் அந்திப் பொழுதை நெருங்கிவிட்டேன். ஆயினும் என் உள்ளமாகிய இல்லத்தில் அறிவு (ஞான) விளக்கை நான் ஏற்றி ஒளிபரவச் செய்யாமல் வாளா இருக்கிறேன். இந்த இருள் நிறைந்த வாழ்க்கைக் கடலைக் கடக்க, எந்த ஏற்பாடும் செய்யாமல் இருக்கிறேன். என் மடமையை என்னவென்று சொல்வேன்!” என்று கிருஷ்ணச் சந்திரன் ஆராய்ந்தான்.
உடனே அவன் இல்லறத்தைத் துறந்தான். பிருந்தாவனம் சென்றான்.
அவன் தன் செல்வத்தைக் கொண்டு கிருஷ்ணன் கோயிலைக் கட்டி முடித்தான். மிகுந்த செல்வத்தை எளியவர்களுக்கு வாரி வழங்கினான். தான் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தினான்.
பிற்காலத்தில் அவனை மக்கள் அன்போடு லாலா பாபு என்று அழைத்தார்கள்.
ஒரு சாதாரண நிகழ்வு அவனது வாழ்க்கையையே மாற்றி அமைத்து விட்டது.