தர்மபுத்திரர் ராஜசூய யாகம் செய்தார். கிருஷ்ணனின் மேற்பார்வையில் அது மிகவும் கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணன் எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்தான்.
அதன்படி பீமனுக்கு, உணவுக் கூடத்தில் அடியார்களை உபசரிக்க வேண்டிய வேலை.
பீமன் அடியார்களுக்குத் தானே முன்நின்று பரிமாறினான். காய்கறிகள், பட்சணங்கள், பழங்கள், உணவு வகைகள் எல்லாவற்றையும் அவர்களுக்கு அள்ளி அள்ளிப் போட்டான். அதனால் முதலில் ருசித்துச் சாப்பிட்டவர்கள் பின்பு சாப்பிடத் திண்டாடினார்கள். ஆனால், பீமனோ உணவு வகைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டேயிருந்தான். சாப்பிடும்படி அவர்களை வற்புறுத்தினான். பிறகு அவர்களைப் பலவாறாகத் திட்டினான். மேற்கொண்டு சாப்பிட மறுத்தவர்களைத் தன் கதையைக் காட்டிப் பயமுறுத்தினான்.
அதனால் அடியார்கள் சாப்பிட வருவதை நிறுத்தினார்கள். பீமன் கண்ணுக்குப் படாமல் ஓடி ஒளிந்தார்கள்.
ஒரு நாள் கண்ணன் பீமனை அடியார்களைப் பற்றி விசாரித்தான்: ‘கிருஷ்ணா! என்ன காரணமோ தெரியவில்லை. இப்போதெல்லாம் இருபது முப்பது பேர்களேச் சாப்பிட வருகின்றனர்’ என்றான் பீமன்.
ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்த கண்ணன், ‘பீமா! நான் போஜன சாலையைக் கவனித்துக் கொள்கிறேன். நீ கந்தமாதன மலைக்குச் சென்று, கந்தமாதன முனிவரைக் கண்டு வணங்கிவிட்டு வா’ என்றான். அதன்படியே பீமனும் சென்றான்.
கிருஷ்ணன் யாகசாலைக்குள் நுழைந்தான். அங்கே சாப்பிட அடியார்கள் யாரையும் காணவில்லை. உடனே அவன் அவர்களைத் தேடிப் போனான்.
‘என்ன இது! உங்கள் யாருக்கும் பசிக்கவில்லையா? ஏன் இன்னும் சாப்பிட வரவில்லை?’ என்று கேட்டான்.
ஆனால், அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனரேத் தவிர, யாரும் பதில் சொல்லவில்லை.
கடைசியில் ஒருவர், ‘பீமன் உணவுப் பண்டங்களை முறம் முறமாகத் தள்ளுகிறான். அவற்றைச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமென்று பயமுறுத்துகிறான். கன்னாபின்னாவென்று திட்டுகிறான்’ என்று சொன்னார்.
கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப்படுத்திச் சாப்பிட அழைத்துச் சென்றான்.
இதற்கிடையில் பீமன் கந்தமாதன மலையை அடைந்தான். அங்கே பொன்மேனியோடு விளங்கிய கந்தமாதன முனிவர் ஜபம் செய்து கொண்டிருந்தார். பீமன் அவரை வணங்கினான்.
‘பீமா! இப்படிச் சற்று அருகில் வா’ என்றார் முனிவர்.
ஆனால் அவர் வாயிலிருந்து வந்த ஒரு துர்வாடை பீமனை நெருங்கவிடாமல் அடித்தது.
அதைக் கண்டு முனிவர், ‘பீமா! உன் தயக்கத்திற்குக் காரணம் புரிகிறது. முற்பிறவியில் நான் அளவில்லாத தானதர்மங்கள் செய்தேன். அதன் பயனாகத்தான் எனக்கு இந்த ஜன்மத்தில் இந்த அழகான பொன்னிற மேனி அமைந்துள்ளது. ஆனால், வந்த யாசகர்களைக் கடுமையாகத் திட்டியும் தூஷித்தும் தானம் செய்ததனால் என் வாயில் துர்நாற்றம் வீசுகிறது’ என்று விசனத்தோடு சொன்னார்.
பீமனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘இந்த முனிவரைப் போலத்தானே நானும் அடியார்களைக் கன்னா பின்னாவென்று திட்டி உணவு கொடுத்தேன்? சாப்பிட வந்தவர்களை இன்னும் உண்ணும்படி கதையைக் காட்டிப் பயமுறுத்தினேனே. எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ!’ என்று கலங்கினான்.
அப்பொழுது முனிவர், ‘பீமா! கிருஷ்ணன் அனுப்பிய உன்னைக் கண்டதும் என் சாபம் நீங்கியது. என் வாயில் இதுவரை இருந்து வந்த துர்நாற்றம் நீங்கிவிட்டது’ என்று சொன்னார்.
பீமன் ஊர் திரும்பிக் கண்ணன் காலில் விழுந்தான். ‘எனக்குப் புத்தி வந்தது. என்னை மன்னித்துவிடு’ என்று கதறினான்.
‘அன்னதானமோ, வேறு எந்தத் தானமோ செய்வது பெரிதல்ல. இனிமையாகப் பேசி, தானம் கொடுக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்’ என்றான் கிருஷ்ணன்.