தேவராஜனான இந்திரன் ஒரு தடவை தேவ சிற்பியான விச்வகர்மாவைக் கூப்பிட்டு, பதினான்கு உலகங்களிலும், அதை விடச் சிறந்த மாளிகை கிடையாது என்று சொல்லும்படி அத்தனை பெரியதும், அத்தனை அழகியதுமான மாளிகை ஒன்று கட்ட வேண்டுமென்று உத்தரவிட்டான்.
விச்வகர்மா தன் உதவியாட்களை வைத்துக் கொண்டு மிகப் பெரிய மாளிகையைக் கட்ட ஆரம்பித்தான்.
மிகப் பெரிய மாளிகையாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மிக அழகிய மாளிகையாகவும் இருக்க வேண்டும் என்று இந்திரன் விரும்பியதனால், பல தேவ வருடங்கள் ஆகியும் விச்வகர்மாவினால் மாளிகையைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஆதலால் விச்வகர்மாவும் அவனுடைய உதவியாட்களும் களைத்துப் போய்விட்டார்கள்.
இந்திரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று அவன் திகைத்திருந்த போது அங்கே நாரத முனிவர் வந்து சேர்ந்தார்.
நாரதரைக் கண்டதும் அவருக்குத் தன் மாளிகையைக் காட்ட வேண்டுமென்று இந்திரனுக்கு ஆசை உண்டாயிற்று. அதைச் சுற்றிக் காண்பித்துவிட்டு, ‘நீங்கள் பதினான்கு உலகங்களிலும் சஞ்சாரம் செய்கிறீர்களே. இத்தனை பெரிய மாளிகையை எங்காவது கண்டதுண்டா?’ என்று கேட்டான்.
அதற்கு நாரதர், ‘நான் பார்த்ததில்லை. ஆனால் மகரிஷி லோமசர் சிரஞ்சீவி. அவர் பார்த்திருக்கிறாரோ என்னவோ!’ என்றார்.
அந்தச் சமயத்தில் மகரிஷி லோமசரும் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு உடம்பெல்லாம் ரோமங்கள் இருந்ததனால் லோமசர் என்று பெயர். இடுப்பில் கௌபீனம், தலையில் சின்னப் பாய், அவ்வளவுதான் அவருடைய ஆஸ்தி.
இந்திரன் அவரைப் பார்த்து, எதற்காகப் பாயைத் தலைமேல் விரித்தாற்போல வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
அதற்கு லோமசர், ‘இந்த உடலோ அநித்தியம். இந்த அநித்தியமான உடலைக் காப்பதற்காக அதற்கென்று ஒரு வீடு கட்டிக் கொள்வானேன்? இந்த உடலை வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் காப்பாற்ற இந்தச் சின்னப் பாய் போதாதா?’ என்று கேட்டார்.
இந்தப் பதிலைக் கேட்டு இந்திரன் ஆச்சரியப்பட்டான்.
‘சிரஞ்சீவியாகிய தாங்களா, தங்கள் உடலை அநித்தியம் என்கிறீர்கள்?’
‘சிரஞ்சீவியாக இருந்தாலும் என் உடலும் ஒரு நாள் போக வேண்டியதுதான். என் உடலிலுள்ள அத்தனை ரோமங்கள் உதிர்ந்ததும், இந்த உடல் அழிந்துவிடும். இதோ பார். என் மார்புப் பாகத்தை. ஒரு காசளவு ரோமம் உதிர்ந்துவிட்டது. அத்தனைக்கும் என் ரோமங்கள் உதிர்வதற்கு வெகு காலம் ஆகிறது என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பிரம்மா மறையும் போதும் என் உடலிலிருந்து ஓர் உரோமம் கீழே உதிர்கிறது. உனக்குத்தான் பிரம்மாவின் ஆயுட்காலம் எவ்வளவு சிறியது என்பது தெரியுமே! பதினாறு இந்திரர்களின் ஆயுட்காலம் பிரம்மாவுக்கு ஒரு நாள்; அப்படி 365 நாள் ஆனால் பிரம்மாவுக்கு ஒரு வருஷம்; அப்படி நூறு வருஷங்கள் ஆனால் ஒரு பிரம்மாவின் ஆயுள். அவ்வளவுதானே! இந்த அற்ப காலத்திற்காகவா என்னைச் சிரமப்பட்டு வீடு கட்டிக்கொள்ளச் சொல்கிறாய்?’ என்று கேட்டார்.
மகரிஷி லோமசரின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது தன் ஆயுட்காலம் எவ்வளவு சிறியது என்பதை இந்திரன் எண்ணிப் பார்த்தான். உடனே அந்தப் பெரிய மாளிகையின் வேலையை நிறுத்தும்படி கட்டளையிட்டான்.