ஒரு நாள் நண்டிற்கு சுவையான ஒரு இனிப்பு உண்ணக் கிடைத்தது. அதன் மணமும் சுவையும் அதை மயக்கியது.
அந்த நண்டு ஆசையுடன் அந்த இனிப்பை உண்ணச் செல்லும் போது, ஒரு குரங்கு அங்கே வந்தது.
அந்தக் குரங்கிற்கும் அந்த இனிப்பின் மேல் ஆசை வந்து விட்டது.
அப்போது, அந்தக் குரங்கு ஒரு தந்திரம் செய்து அந்த இனிப்பை நண்டிடமிருந்து பறிக்கச் செயலில் இறங்கியது.
அதன்படி அந்தக் குரங்கு, நண்டிடம் ஒரு மாங்கொட்டையைக் கொடுத்தது. அதன் பின்பு, “நண்டே, நான் உனக்குக் காலத்திற்கும் பயன்படும் ஒரு பரிசு கொடுக்கிறேன். அதுதான் இந்த மாங்கொட்டை. இதை நீ மண்ணில் நட்டு மரமாக வளர்த்தால் உனக்கு பல மாங்கனிகள் எதிர்காலத்தில் உண்ணக் கிடைக்கும். இவ்விதம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து உனக்கு உதவ என்னை விட்டால் யாரும் உனக்குக் கிடையாது” என்றது.
அதைக் கேட்ட நண்டு, “உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மிக்க நன்றி” என்றது.
குரங்கு உடனே சொன்னது, நீ எனக்குக் கைம்மாறு எல்லாம் செய்ய வேண்டாம். உன் கையில் இருக்கும் இனிப்பை எனக்குக் கொடு, அது போதும்” என்றது.
நண்டும் இனிப்பைக் குரங்கிடம் கொடுத்துவிட்டு, மாங்கொட்டையை நம்பிக்கையுடன் மண்ணில் புதைத்து, அது மரமாக வளரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தது.
சில காலம் கழித்து, அந்த மாங்கொட்டை ஒரு மாமரமாக வளர்ந்து விட்டிருந்தது. அந்த நண்டிற்கு அந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், குரங்கின் நினைப்பு வரும். நன்றியோடு அக்குரங்கை மனதில் வாழ்த்தும். அம்மாமரத்தில், பல மாங்கனிகள் பழுத்துத் தொங்கத் துவங்கின. ஆனால், நண்டினால் அம்மாம்பழங்களை மரத்தில் ஏறி உண்பது மிகவும் சிரமாக இருந்தது.
அக்காலகட்டத்தில், முன்பு உதவிய குரங்கு மறுபடியும் அப்பக்கமாக வந்தது. நண்டினையும், மாமரத்தினையும் பார்த்தது. அம்மாம்பழங்களைக் கண்ட உடன், அவைகளைச் சாப்பிட குரங்கிற்கு ஆசை வந்துவிட்டது.
அக்குரங்கு, நண்டிடம் சொன்னது, “நண்டே, நான் மரத்தில் ஏறி, சுவையான மாம்பழங்களை ருசி பார்த்து உனக்குத் தரட்டுமா? என்று கேட்டது.
நண்டுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. குரங்கை உடனே சென்று பறித்துத் தருமாறு அவசரப்படுத்தியது.
குரங்கும், மரத்தில் ஏறி பல மாம்பழங்களை ருசித்து உண்டது. ஆனால், ஒன்றைக் கூடக் கீழேயுள்ள நண்டுக்குத் தரவில்லை.
கீழே இருந்து நண்டு, குரங்கிடம் பழங்களைப் பறித்துப் போடுமாறு மறுபடியும் கேட்டது.
அதைக் கேட்ட குரங்கிற்கு ஆத்திரம் வந்தது.
அது மிகப் பெரிய ஒரு மாம்பழத்தைப் பறித்து, “இந்தா, நண்டேப் பிடித்துக் கொள்” என்று வேகமாகத் தூக்கியெறிந்தது.
அந்த மாம்பழத்தைப் பிடிக்க முயன்ற நண்டு, அந்த மாம்பழத்தாலேயே அடிபட்டு இறந்து போனது.
இறக்கும்போது, அந்த நண்டு நினைத்துக் கொண்டது, “எனது நண்பன் குரங்கு மிகவும் நல்லவன். என்னால்தான் அந்த மாம்பழத்தைச் சரியாகப் பிடித்து உண்ண முடியவில்லை”