லியாங் என்ற நாட்டின் தலைமையமைச்சராக வெய்சு என்பவர் பதவியேற்றார். சில காலம் கழித்து ஷுவாங்சு என்பவர் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
பொதுவாகவே நம்மோடு இருக்கும் சிலர் அவர்களுடைய கருத்துக்களை நம்மிடம் சொல்லத்தானேச் செய்வார்கள்.
அப்படித்தான், வெய்சுவுடன் இருந்த ஒருவர், “வெய்சு, இப்போது ஷுவாங்சு இங்கே வருவதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய், உன்னுடைய தலைமையமைச்சர் பதவியைப் பறித்து தான் தலைமையமைச்சராவதற்குத்தான் ஷுவாங்சு இங்கே வந்துள்ளார்” என்று கூறினார்.
இதைக்கேட்ட வெய்சுவுக்கு கதி கலங்கிவிட்டது. “அடடா, ஷுவாங்சு நம்மைவிட திறமைசாலி, நிச்சயம் மற்றவர் சொன்னது போல, நம் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான்” என்று உள்ளுக்குள் புழுங்கினான்.
சரி, முதலில் ஷுவாங்சுவை சந்தித்துப் பேசுவோம் என்று புறப்பட்டான்.
ஆனால், வெய்சு நகர் முழுதும் தேடியும் ஷுவாங்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. “என்ன ஆனதோ, ஏதானதோ என்ற குழப்பமும், பதவி போனால் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமே” என்ற கலக்கம் மறுபுறமுமாய் வெய்சு அலைந்து திரிந்தும் ஷுவாங்சுவை காணமுடியவில்லை.
மூன்று நாட்கள் தேடிக் களைப்பானதுதான் மிச்சம்.
இறுதியில் ஷுவாங்சுவே வெய்சுவை சந்திக்கச் சென்றார்.
“தெற்கே ஃபீனிக்ஸ் என்ற ஒரு பறவை இருக்கிறது, அதைப் பற்றி நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று வெய்சுவை நோக்கி வினவிய ஷுவாங்சு பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தார்.
இந்த ஃபீனிக்ஸ் பறவை தென் கடலிலிருந்து புறப்பட்டு வட கடல் நோக்கிப் பறக்கும். மிக அழகான சிறப்புமிக்க பாராசால் மரம் தவிர, வேறு எந்த மரத்திலும் செடியிலும் சென்று அமராது. மூங்கில் பழங்களைத் தவிர்த்து, வேறு எதையும் உண்ணாது. சுவையான சீர்சுனைகளில் தாகம் தணிக்குமேத் தவிர, வேறு எந்த நீரையும் பருகாது.
இப்படி ஒரு நாள் ஃபீனிக்ஸ் பறவை வானில் பறந்து கொண்டிருக்கையில் கீழே ஒரு ஆந்தை செத்து அழுகிப் போன ஒரு எலியைச் சாப்பிடத் தயராக இருந்தது. ஃபீனிக்ஸ் பறவை ஆந்தையைக் கடந்து சென்ற போது, ஆந்தை மேலே அண்ணாந்து பார்த்து ஃபீனிக்ஸ் பறவையை விரட்டும் தொனியில், ‘சூ’ என்றதாம். என்ன நீயும் உன் தலைமையமைச்சர் பதவியைக் கொண்டு என்னை ‘சூ’ என்ற துரத்ப்த பார்க்கிறாயா என்றாராம் ஷுவாங்சு.
வெய்சு வெட்கித் தலைகுனிந்தான்.