முல்லா நஸ்ருதீன் வெளியூர் பயணம் புறப்பட்டிருந்தார். படகைப் பிடிக்க எண்ணி அவசரமாக ஓடினார். படகைத் தவறவிடக் கூடாத நிலையில் இருந்தார்.
அவர் படகுத்துறையை அடைந்த போது, படகு, நகர்ந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து எட்டிக் குதித்துப் படகில் காலூன்றினார். அப்போது, நிலைதடுமாறி, படகினுள் குப்புற விழுந்து விட்டார். முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ஆடை கிழிந்து போயிற்று.
ஆனாலும் மகிழ்ச்சியாக எழுந்தார்.
வியப்போடு அவரைப் பார்த்த பயணிகளிடம், "நான் தாமதமாக வந்தாலும் படகைப் பிடித்துவிட்டேன்." என மகிழ்ச்சியாகக் கூறினார்.
அப்போது அங்கிருந்த பயணியருள் ஒருவர், "உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை முல்லா!! இந்தப்படகு புறப்பட்டுப் போகவில்லை. கரையை நோக்கியல்லவா வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் என்ன அவசரம்?" என்றார்.
எங்கோ சென்று சேர நினைத்து, வாழ்நாளெல்லாம் ஓடி, இறுதி சமயத்தில், உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவந்தால், அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்குப் பொருளிருக்காது. புறப்பட்டுச் செல்லும் படகிற்குப் பதிலாக, திரும்ப வரும் படகில் உட்கார்ந்தது போலாகி விடும்.
அடுத்தவர் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்காதீர்கள். அவர் சென்று சேர வேண்டிய இடம் வேறாக இருக்கலாம். உங்கள் இலக்கை நோக்கியப் பாதையில் பயணிப்பவர்களோடு செல்லுங்கள். அதுவே இருவருக்கும் உதவிகரமாக இருக்கும்.
அவசரகதியில் என்ன ஏதென்று தெரியாமல் பயணிக்காதீர்கள். முல்லா அந்தத் தவறைத்தான் செய்தார். படகு எங்கு செல்கிறதென்று, சரியானவரிடம் கேட்டு உறுதி செய்திருந்தால், அவர் தவறான படகில் ஏறி ஆடையைக் கிழித்திருக்க மாட்டார். ஆகவே, உங்கள் இலக்கிற்கான, சரியான பாதையில்தான் பயணிக்கிறீர்களா? என்று அவ்வப்போது உறுதி செய்து கொண்டு பயணியுங்கள். சற்று நேரமானாலும் பரவாயில்லை; சரியான பாதையில் பயணியுங்கள்.