காட்டில் தவம் செய்து கொண்டிருந்த துறவி ஒருவரை அரசன் வணங்கினான்.
கண் விழித்த துறவி அரசனை வாழ்த்தினார்.
துறவி இளைஞராக இருப்பதைப் பார்த்து அரசன் வியப்படைந்தான்.
"இந்த இளம் வயதிலேயே தன்னந்தனியாகத் தவம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?’’ என்று கேட்டான்.
"அரசே! இளம்பெண் ஒருத்திதான் எனக்கு இந்த ஞானத்தை வழங்கினாள்’’ என்ற துறவி பின்வருமாறு கூறினார்:
"ஒரு ஊரில் ஒரு இளம்பெண் ஒருத்தியின் திருமணப் பேச்சு நடந்தது. யார் மணமகன் என்பதும் உறுதியாயிற்று. அந்த மணமகன் ஒருநாள் அவள் வீட்டிற்கு வந்தான். அப்போது அவளுடைய பெற்றோர்கள் வீட்டில் இல்லை. வெளியூர் சென்றிருந்தார்கள். அவனை வரவேற்று அவள் கூடத்தில் தங்க வைத்தாள். உணவு தயாரிக்கச் சமையல் அறைக்குச் சென்றாள். அவள் நெல்லைக் குத்தி அரிசியாக்க வேண்டியிருந்தது. உரலில் நெல்லை போட்ட அவள் உலக்கையால் குத்த ஆரம்பித்தாள். அப்போது அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஓசை எழுப்பின. நான் வேலை செய்வதை அவர் அறிவாரே! என்று அவள் நாணப்பட்டாள். என்ன செய்வது? என்று சிந்தித்தாள். கையிலிருந்த வளையல்களில் ஒன்றைத் தவிர மற்றவற்றை உடைத்து விட்டாள். அதற்குப் பிறகு எந்த ஓசையும் எழாமல் தன் வேலைகளைச் செய்து முடித்தாள். அதைக் கேள்விப்பட்ட நான், ஞானம் எப்போதும் தனிமையில் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். தனிமையில் இருந்து தவம் செய்யத் தொடங்கினேன்” என்றார்.
துறவியை வணங்கி விட்டு அரசன் அங்கிருந்து புறப்பட்டான்.