அந்தக் காலத்தில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்பு, தை மாதத்திலிருந்தேத் தொடங்கி இருக்கிறது.
தமிழ் மாதங்களான பன்னிரண்டு மாதங்களுக்கிடையே ஒரு நாள் சண்டை வந்தது.
ஒவ்வொரு மாதமும் ‘நான்தான் தமிழ் ஆண்டின் முதல் மாதமாக இருப்பேன்’ என்று சொல்லிக் கொண்டன.
தமிழ் மாதங்களின் சண்டையைத் தீர்த்து வைக்கப் பலரும் முயற்சி செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் தன்னிடமிருந்துதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு தொடங்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொரு காரணத்தைக் கூறின.
மாதங்களுக்குள் நடைபெற்ற சண்டையை எவராலும் தீர்த்து வைக்க முடியவில்லை.
கடைசியில் மாதங்கள் அனைத்தும் அணி வகுத்து இறைவனிடம் சென்று தங்கள் வழக்கைக் கூறின.
இறைவன் ஒவ்வொரு மாதங்களின் தனிச் சிறப்பையும் கேட்டு, ‘ஆண்டின் முதல் மாதமாக இருக்கும் தகுதி, தை மாதத்திற்கே இருக்கிறது’ என்று தீர்ப்புக் கூறினார்.
இறைவனேச் சொன்னதால் மற்ற மாதங்கள் அனைத்தும் தை மாதத்தையே, ஆண்டின் முதல் மாதமாக ஏற்றுக் கொண்டன.
இறைவன் தை மாதத்தைப் பார்த்து, ‘உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல், அதை நிறைவேற்றி வைக்கிறேன்’ என்றார்.
தை மாதம், இறைவனிடம் ‘என் (தை) மாதத்தின் முதல் நாளை, தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளை, மக்கள் அனைவரும் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும்’ என்ற வேண்டுகோளை முன் வைத்தது.
கடவுளும் தை மாதத்தின் வேண்டுகோளை ஏற்று, ‘தை முதல் நாளை (தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளை) இனி மேல் தமிழர்கள் யாவரும் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவார்கள்’ என்று சொன்னார்.
தை மாதம் ஆண்டு பிறப்பு கொண்டாடத் தொடங்கிய பின்புதான், மனிதர்கள் அனைவரும் தை மாதத்தைப் போல் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தனர்.