ஓர் ஊரில் மிகவும் வறுமையில் வாடிய ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்தாக இருந்தது ஒரே ஒரு பசு மாடுதான்.
அந்த மாடு நிறைய தவிட்டைத் தின்னும், குறைந்த அளவு பால் தரும்.
ஒரு நாள் அவன் மகன் தவிட்டுப் பானையைத் தூக்கிக் கொண்டு வரும் போது தவறிக் கீழே விழுந்து விட்டான்.
அதனால் பானையில் கரைக்கப்பட்ட தவிடு அனைத்தும் சாக்கடைக்குள் விழுந்தது.
அதைப் பார்த்த அவன் ‘என்ன வாழ்க்கை இது? மாட்டிற்குத் தவிடு போட முடியவில்லையே!’ என்று வருத்தப்பட்டான்.
‘இனி இங்கிருக்க வேண்டாம்’ என்று நினைத்து வீட்டை விட்டுப் புறப்பட்டான்.
காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்த அவன் எதிரில் திருமகள் தோன்றினாள்.
"மகனே! என்ன வரம் வேண்டும்?’’ கேள் என்றாள்.
"தாயே! திருமகளே! இந்த ஏழைக்கு நான்கு மூட்டைத் தவிடு கிடைக்குமாறு அருள் செய்யுங்கள்’’ என்று வேண்டினான் அவன்.
அவனது மூடத்தனத்தை நினைத்து திருமகள் சிரித்தாள்.
அவன் கேட்டபடியே அவனுக்கு நான்கு மூட்டைத் தவிட்டைத் தந்து விட்டு மறைந்தாள்.