ஜப்பானில் பெரிய வீரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் நொபுநாகா. அவரிடம் படைவீரர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். சிறிய படை பலத்தை வைத்துக் கொண்டு பெரிய பெரிய படைகளையெல்லாம் அவர் முறியடித்திருக்கிறார்.
அவ்வளவு சாமர்த்தியம் உள்ளவர் நொபுநாகா. ஒரு சமயம் அவர் எதிரியின் மீது படையெடுத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அவருடைய படை வீரர்களுக்கும், தளபதிக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
'இந்தப் போரில் நாம் வெற்றி பெற முடியுமா?' என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்.
இருந்தாலும் இதை எப்படித் தலைவரிடம் தெரிவிப்பது? மிகவும் யோசனை செய்தார்கள்... கடைசியாகக் கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டு விட்டார்கள்.
தலைவர் நொபுநாகா பார்த்தார்.
அவர், “சரி! அதை நாம் முடிவு செய்ய வேண்டாம். புத்த விகாரத்துக்குப் போய்விட்டு வருவோம். 'பூவா, தலையா' போட்டுப் பார்ப்போம். என்ன வருகிறதோ அதன்படி செயல்படுவோம். என்ன சொல்கிறீர்கள்? ஏனென்றால்... போருக்குச் செல்லும் போது முழுமனதோடு போக வேண்டும்... மனதில் ஊசலாட்டம் இருக்கக் கூடாது!" என்று கூறினார்.
அவர் கூறியதற்குத் தளபதியும் படைவீரர்களும், "சரி" என்று ஒப்புக் கொண்டார்கள்.
உடனே அவர்கள் எல்லோரும் அங்கே பக்கத்தில் இருந்த புத்தர் கோயிலுக்குச் சென்றார்கள்.
தலைவர் உள்ளேச் சென்றார்.
எல்லோரும் ஆவலோடு வெளியில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ரொம்ப நேரத்திற்குப் பிறகு தலைவர் நொபுநாகா புத்தர் கோயிலிலிருந்து வெளியே வந்தார்.
அவர், தளபதி மற்றும் துணைத்தளபதிகள் அனைவரையும் அருகில் அழைத்தார்.
அவர்கள் முன்னிலையில் ஒரு தங்கக்காசை எடுத்தார்.
“இதோ பாருங்கள்... இப்போது ‘பூவா, தலையா' போட்டுப் பார்க்கலாம். பூ வந்தால் தோற்றுவிடுவோம். தலை வந்தால் வெற்றி பெறுவோம். பூ விழுந்தால் போர் வேண்டாம்... அதைத் தவிர்த்து விடுவோம். தலை விழுந்தால் போருக்குப் போவோம். விதி இப்போது நம் கையில் தான் இருக்கிறது. இங்கே என்ன தீர்ப்பு கிடைக்கிறதோ அதன்படியே நாம் நடந்து கொள்வோம்!” என்று கூறிவிட்டு தங்கக்காசைச் சுண்டினார். அது சுழன்று மேலே போய் 'கணீர்' என்று தரையில் விழுந்தது.
எல்லோரும் ஆவலோடு அதைக் குனிந்து பார்த்தார்கள். தலை விழுந்திருந்தது.
அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி... ஆரவாரம். அதன் பிறகு அவர்களுக்குப் போருக்குப் போவதா, வேண்டாமா? என்ற சந்தேகம் வரவில்லை.
எல்லோரும் உறுதியான முடிவோடு போருக்குச் சென்றார்கள். வெற்றியோடு திரும்பி வந்தார்கள்.
கோலாகலமாக வெற்றிவிழா நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது தளபதி உரை நிகழ்த்தினார். அதில் அவர், “இந்த வெற்றியைத் தங்க நாணயம்தான் முடிவு செய்தது... அதனால் விதியை யாரால் வெல்ல முடியும்?” என்று கூறினார்.
அவர் பேசிவிட்டு உட்கார்ந்தார். இப்போது தலைவர் நொபுநாகா தன்னிடமிருந்த அந்தத் தங்கக்காசை எடுத்து இரகசியமாகத் தளபதியிடம் கொடுத்தார்.
தளபதி அதை வாங்கிப் பார்த்தார். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமும் தலை தான் இருந்தது!