துங் ஹுவா என்பவர் ஒரு மகா பண்டிதர். அவர் இரக்க சுபாவம் உடையவர்.
ஒரு நாள் அவர் தமது புத்தகங்களை எல்லாம் ஒரு கோணிப் பைக்குள் வைத்துக் கட்டி, கழுதை ஒன்றின் மேல் ஏற்றிக் கொண்டு வெளியூருக்குப் பயணமானார்.
அவர் வழியில், வேட்டைக்காரர்கள் சிலர் ஏதோ பிராணியைத் துரத்திக் கொண்டு போவதைப் பார்த்தார்.
கொஞ்ச தூரத்தில் ஓர் ஓநாய் மூச்சிரைக்க ஓடி வந்தது.
அது பயத்தில் நடுங்கியபடியேப் பண்டிதரைப் பார்த்து, “ஐயா, இரக்கமுள்ள பெரியவரே! வேட்டைக்காரர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். தாங்கள் கொஞ்ச நேரம் என்னைத் தங்கள் பைக்குள் மறைத்து வைத்து, என் உயிரைக் காப்பாற்றி உதவி செய்யுங்கள். இந்த நன்றிக்கடனை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன். தயவு செய்யுங்கள், ஐயா... சீக்கிரம் உதவுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
அதன் நிலையைப் பார்த்து பண்டிதர், “ஐயோ பாவம்!” என்று இரக்கப்பட்டார்.
அதனால் அவர் சற்றும் யோசிக்காமல் கோணிப்பைக்குள் இருந்த புத்தகங்களை வெளியே எடுத்தார். ஓநாயை உள்ளே மறைந்து கொள்ளச் செய்து விட்டு, அதைச் சுற்றிலும் புத்தகங்களை வைத்து மறைத்து விட்டார்.
அப்போது அங்கே வந்த வேட்டைக்காரர்கள், அவரிடம் ஓநாயைப் பற்றி விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் ஓநாயைக் காணாததால் திரும்பிச் சென்றனர்.
அவர்கள் தலை மறைந்ததும் அந்த ஓநாய் பண்டிதரிடம் தன்னை வெளியேத் திறந்துவிடும்படி கூறிற்று.
பண்டிதரும் அப்படியேச் செய்தார்.
வெளியே வந்த அடுத்த நிமிடம் அந்த ஓநாய் தனது கூர்மையான பற்களைக் கோரமாகக் காட்டியபடியே, பண்டிதரை நோக்கிக் கூறியது:
“ஐயா, நீங்கள் ரொம்ப நல்லவர். தீயவர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வந்தபோது என் உயிரைக் காப்பாற்றினீர்கள். அதனால் எனது வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன். ஆனால் இப்போது அகோரப் பசியில் என் உயிர் போகிறது. உடனே எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காவிட்டால், நான் செத்தேப் போய்விடுவேன். பட்டினியால் நான் சாவதிலிருந்து, தாங்கள் என்னைக் காப்பாற்ற விரும்பினால், தங்களையே நான் சாப்பிடுவதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்."
இவ்விதம் சொல்லிக் கொண்டே ஓநாய் பண்டிதர் மேல் பாய்ந்தது. இதைப் பண்டிதர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். ஓநாயும் அவரை விடாமல் துரத்தியது.
நல்ல வேளையாக எதிரில் ஒரு கிழவன் வந்தான்.
பண்டிதர் துங்-ஹுவா அவனிடம் ஓடிச் சென்று, “பெரியவரே! என்னை எப்படியாவது ஓநாயிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்று வேண்டினார்.
"அது சரி, என்ன நடந்தது?” என்று அந்தக் கிழவன் கேட்டான்.
பண்டிதர், “ஐயா, இதோ இந்த ஓநாயை வேட்டைக்காரர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள். இதுவோ தன் உயிரைக் காப்பாற்றும்படி என்னிடம் கெஞ்சிக் கேட்டது. நானும் அதற்குச் சம்மதித்து இதைக் காப்பாற்றினேன். ஆனால் இப்போது இந்த ஓநாய் என்னையே கடித்துத் தின்ன வருகிறது. நீங்கள் தான் இதற்கு நல்லவிதமாக எடுத்துச் சொல்லி என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று நடந்ததை எல்லாம் விவரமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட ஓநாய் சொல்லிற்று: "முதியவரே, இவர் என்னை மறைத்து வைப்பதற்காக, என் கால்களை இறுகக் கட்டிக் கோணிப்பைக்குள் போட்டுச் சுற்றிலும் பெரிய பெரிய புத்தகங்களைத் திணித்து வைத்துவிட்டார். அதன் காரணமாக என்னால் அந்தப்பக்கம், இந்தப் பக்கம் அசைய முடியவில்லை மூச்சுக்கூட விடமுடியாமல் திணறிப் போனேன். அது மட்டுமா? நான் அப்படியே மூச்சுமுட்டிச் சாக வேண்டும் என்பதற்காக இவர் அந்த வேட்டைக்காரர்களிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் நான் இவரை ஏன் சாப்பிடக் கூடாது?"
அந்தக் கிழவன் நிலைமையைப் புரிந்து கொண்டான்.
அவன் ஓநாயைப் பார்த்து, “நீ கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையில் என்ன நடந்தது? உன்னை இவர் கோணிப்பைக்குள் எப்படி அடைத்து வைத்தார்? அதைக் காட்டு. அப்போது தான் நீ சொல்வது போல் உனக்கு மூச்சுத் திணற நேர்ந்ததா என்பதை நான் தெரிந்து கொள்ள முடியும்” என்றான்.
ஓநாய் மிகவும் உற்சாகத்துடன் அதற்குச் சம்மதித்தது. புத்தகம் இருந்த கோணிப் பைக்குள் நுழைந்து கொண்டது.
உடனே அந்தக் கிழவன் கோணிப்பையை இறுக்கமாகக் கட்டினான்.
பிறகு கிழவன் பண்டிதரிடம், “உங்களிடம் கத்தி இருக்கிறது அல்லவா? அதைப் பயன்படுத்தி இந்த ஓநாயைக் கொன்றுவிடுங்கள்" என்று மெதுவாகக் கூறினான்.
"ஐயோ பாவம், இந்த ஓநாயைக் கொல்வதா?” என்று கூறி, பண்டிதர் மிகவும் தயங்கினார்.
“நீங்கள் சரியான முட்டாள். இந்த நன்றிகெட்ட ஓநாய்க்குப் போய் இரக்கம் காட்டலாமா?" என்று சொல்லிக் கொண்டே, அந்தக் கிழவன் பண்டிதரிடமிருந்து கத்தியை வாங்கி ஓநாயைக் கொன்றான்.