ஒரு நாள் காலை நேரம்.
சீடர்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு அவர்களிடம் பேசுவதற்கு பகவான் புத்தர் வருகிறார்.
புத்தர் வரும்போது கையில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு வருகிறார். அந்தத் துணி ஒரு சிறிய துணிதான். சாதாரணமாகக் கைக்குட்டை இருப்பதைவிட, புத்தர் கொண்டு வந்த துணி சற்றுப் பெரியதாக இருந்தது.
அவர் வந்து மேடையில் உட்கார்ந்தார்.
புத்தர் எதுவும் பேசவில்லை .... பேசாமல் அந்தத் துணியில் முடிச்சுகள் போட ஆரம்பித்தார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை
'என்ன இது? வழக்கமாக புத்தர் பேசுவார்.... இப்போது அதற்கு மாறாக வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறாரே!.. சரி இருக்கட்டும்...' என்று நினைத்துப் பேசாமல் புத்தரையே சீடர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
புத்தர் தலை நிமிரவில்லை.... அவர் பாட்டுக்கு முடிச்சுகள் போட்டபடியே அமர்ந்திருந்தார்.
ஐந்து முடிச்சுகள் போட்டதற்குப் பிறகு புத்தர் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தார்:
"சீடர்களே, இப்போது நான் இந்தத் துணியில் ஐந்து முடிச்சுகள் போட்டிருக்கிறேன் இதை அவிழ்க்கப் போகிறேன்... அவிழ்ப்பதற்கு முன்னால் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். முதல் கேள்வி என்னவென்றால்... முதலில் நான் வைத்திருந்த துணியும், முடிச்சகள் விழுந்த இந்தத் துணியும் ஒன்றுதானா?” என்று புத்தர் வினவினார்.
உடனே புத்தரின் சீடர்களில் முக்கியமானவரான ஆனந்தர் எழுந்து, “பெருமானே! ஒரு வகையில் எல்லாம் ஒன்றுதான்... முதலில் இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றுதான்... முடிச்சுகள் மட்டும் தான் அதில் வித்தியாசம்! ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது... அவ்வளவு தான்! முன்னால் இருந்த துணி சுதந்திரமுடையது. முடிச்சு விழுந்ததும் அதன் சுதந்திரம் போய்விட்டது. இப்போது இந்தத் துணி அடிமைப்பட்டுக் கிடக்கிறது!” என்று கூறினார்.
அதற்கு புத்தபிரான், "ஆமாம். நீ சொல்வது சரிதான். இது ஒரு வகையில் ஒரே துணிதான். ஆனால் மற்றொரு விதத்தில் வேறுபட்டிருக்கிறது.
"எல்லோரும் இயல்பில் கடவுள்கள்தான். ஆனால் முடிச்சுகள் போட்டுக் கொண்டு... சிக்கல்களில் மாட்டிக் கொண்டு... அடிமைப்பட்டுப் போய்விடுகிறார்கள். நாம் அனைவரும் அடிப்படையில் புத்தர்கள்தான். ஆனால், இந்த முடிச்சுகள் போன்று மக்கள் தனிமைப்பட்டுப் போய் தனித்தனி உலகங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு.. அவற்றில் சிக்கிக்கொண்டு தனிமைப்பட்டுப் போய்விடுகிறார்கள். இதைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்' என்றார்.
சிறிது நேரம் கழித்து புத்தர், “இந்த முடிச்சுகளை அவிழ்க்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதும், மற்றொரு முக்கிய சீடரான சாரிபுத்திரர் எழுந்து நின்று, "பெருமானே! அதை அவிழ்க்க வேண்டுமென்றால்... நான் தங்களின் அருகில் வருவதற்குத் தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். முடிச்சுகள் எப்படி போடப்பட்டிருக்கின்றன என்று தெரியாத வரையில் அதை அவிழ்ப்பதற்கு வழியில்லை. முடிச்சுப் போட்ட முறை தெரிந்தால், அதை அவிழ்ப்பது சுலபம்! நெருங்கிப் பார்க்காமல் எதுவும் செய்ய முடியாது. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவில்லாமல் விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவை. சில சமயம் அவை அவிழ்க்கவே முடியாமல் கூட போய்விடக்கூடும்!” என்று தெரிவித்தார்.
புத்தர் நிமிர்ந்து பார்த்து, “நீ சொன்னது சரிதான். அதுதான் வாழ்க்கை, அதுதான் வாழ்க்கையின் சிக்கல்!” என்றார்.
இதன் விளக்கம் என்னவென்றால், "நல்லதோ கெட்டதோ மற்றவர்கள் தந்து நமக்கு வருவதில்லை. நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு நாமேதான் காரணம்” என்பதுதான்.
ஆமாம்; நம்முடைய சிக்கல்களுக்கு நாம் தான் காரணம்; வேறு யாரும் இல்லை.
நம்மை அறியாமல், விழிப்புணர்ச்சி இல்லாமல் நாம் போட்டிருக்கும் முடிச்சுகளில் சிக்கி.... சிக்கலை அவிழ்க்க முடியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
எப்போதுதான் நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.