மகாபாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
பகல் வேளையில் போரில் ஈடுபட்டாலும், சூரியன் மறைவிற்குப் பிறகு போர் நின்றதும், பாண்டவர்களும் கௌரவர்களும் பகைமை பாராட்டாமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது வழக்கம்.
போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகிய மூவரும் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில் துரியோதனன் ஒரு நாள் தர்மரிடம் சென்று, "அண்ணா! நான் போரிடும் போது என் உடலில் போர் ஆயுதங்கள் எதுவும் ஊடுருவிச் சென்று தாக்காதபடி, என் உடல் வலிமையுடன் இருப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டான்.
தர்மர் துரியோதனனிடம் பகைமை பாராட்டாமல், கள்ளம் கபடமின்றி பின்வருமாறு கூறினார்:
"தம்பி! உன் உடலைப் போர்க் கருவிகள் ஊடுருவிப் பாயாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதைச் சொல்கிறேன் கேள்....! உன் தாய் காந்தாரி மிகச் சிறந்த பதிவிரதை. அவள் தன் கணவன் கண்பார்வையற்றவர் என்பதால், தானும் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு யாரையும் எதையும் பார்க்காமல் வாழ்ந்து வருகிறாள். எனவே, உன் தாயின் கண்கள் ஒரு தெய்வீகச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. அவர் யாரையாவது ஒரு முறை பார்க்க நேர்ந்தால், அப்படிப் பார்க்கப்பட்டவரின் உடல் வஜ்ரம் போன்று உறுதியும் வலிமையும் பெற்றுவிடும். அதனால் நீ உன் ஆடைகளைக் களைந்து விட்டு, உன் தாயின் எதிரில் போய் நின்று அவளைக் கண் திறந்து உன்னைப் பார்க்கும்படிச் சொல். அவள் பார்வை உன் மீது பட்டதும், உன் உடல் வஜ்ரம் போன்று உறுதியாகி விடும். அதன் பின்பு போர்க்கருவிகள் எதுவும் உன் உடலைத் துளைக்க முடியாது”
துரியோதனன் மகிழ்ச்சியுடன், “அப்படியேச் செய்கிறேன், அண்ணா !” என்று கூறி தர்மரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
இந்தச் செய்தி அர்ஜுனனுக்குத் தெரிய வந்ததும், அவன் உடனே அதை ஸ்ரீகிருஷ்ணனிடம் கூறினான்.
'தர்மர் துரியோதனனுக்குக் கூறிய யோசனையால் பாண்டவர்களுக்குப் போரில் தோல்வி ஏற்படும்!' என்பதை உணர்ந்து ஸ்ரீகிருஷ்ணன் அதைப் பற்றி சிந்தித்தார்.
அவர் துரியோதனின் செயலைத் தடுக்க எண்ணினார்.
ஆதலால் ஸ்ரீகிருஷ்ணன், துரியோதனனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு செல்லும் தோட்டக்காரனைப் போல் வேடம் கொண்டார்.
அந்த வேடத்தில் அவர் துரியோதனனைச் சந்திக்கச் சென்றார்.
அப்போது துரியோதனன் போர்க்களத்திலிருந்து அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தான்.
வழியில் அவனைத் தோட்டக்காரன் வேடத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணன் சந்தித்து போர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர் போல் நயமாகப் பேசினார்.
தர்மர் கூறிய யோசனையைத் துரியோதனன், தோட்டக்காரன் வடிவத்தில் வந்த ஸ்ரீகிருஷ்ணனிடம் தெரிவித்தான். “என் உடல் வஜ்ரம் போன்று ஆகப் போகிறது! ஆதலால் என்னை இனி யாராலும் வெல்ல முடியாது! போரைப் பற்றி நான் கவலையேப்படவில்லை! போரில் நான் வெற்றி பெறப் போவது நிச்சயம்!” என்று துரியோதனன் கர்வத்தோடு பேசினான்.
அதைக் கேட்டதும் தோட்டக்காரன் வடிவத்தில் வந்த ஸ்ரீகிருஷ்ணன், "அரசே! தர்மர் நெறி தவறாதவர் என்பது உண்மைதான்... இருந்தாலும் அவர் இப்போது உங்களுக்குப் போரில் எதிரி! உங்களை வென்று உங்கள் ராஜ்யத்தைக் கைப்பற்ற நினைப்பவர்! இதை நீங்கள் யோசிக்க மறந்து விட்டீர்களே! மேலும் தாங்கள் ஆடையின்றி ராஜ மாதா காந்தாரியின் முன்னால் சென்று நின்றால், அவர்கள் பார்வைபட்டதும் உங்கள் உடம்பு எரிந்து சாம்பலாகி விடுமே! நீங்கள் அநாகரீகமாக ஆடையில்லாமல் வந்திருக்கிறீர்கள் என்று நினைத்து, ராஜமாதா உங்களைச் சபித்து விடுவார்களே!” என்று கூறி துரியோதனனின் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அதோடு அவர், “அவ்விதம் நேராமல் இருக்கும் பொருட்டு, நீங்கள் இந்தப் பூமாலையால் உங்கள் இடுப்பைச் சுற்றி மறைத்துக் கொண்டு ராஜமாதாவிடம் செல்லுங்கள். அதுதான் தங்களுக்கு நல்லது” என்று ஒரு வழியும் கூறினார்.
துரியோதனன் மனதில், 'இந்தத் தோட்டக்காரன் சொல்வது சரி!' என்று பட்டது.
எனவே அவன் தோட்டக்காரன் கொடுத்த பூமாலையை வாங்கிக் கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்தான்.
பின்னர் அவன் பூமாலையால் இடுப்புப் பகுதியை மறைத்தபடி காந்தாரியிடம் சென்றான்.
அவன் சென்ற நேரம் துரியோதனன் தன் தாயைச் சந்திக்கும் நேரமல்ல.
அதனால் காந்தாரி, 'துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடி வந்துவிட்டான்!' என்று நினைத்து அவனைக் கடிந்து கொண்டாள்.
துரியோதனன், தர்மரிடம் தான் கேட்டதையும் அதற்குத் தர்மர் கூறியதையும் காந்தாரியிடம் தெரிவித்தான்.
அதைக் கேட்ட காந்தாரி, "மகனே, நீ உன் ஆடைகளைக் களைந்துவிட்டு என் முன் நில்” என்றாள்.
பிறகு அவள் தன் கண்கட்டுகளைப் பிரித்துவிட்டுத் துரியோதனைப் பார்த்தாள்.
துரியோதனன் பூமாலையால் சுற்றி மறைத்திருந்த இடுப்புப்பகுதி அங்கங்களைத் தவிர, அவனுடைய மற்ற அவயவங்கள் அனைத்தும் காந்தாரியின் பார்வை பட்டுக் கடினமாகி உறுதிப்பட்டன.
“இடுப்பைப் பூமாலையால் சுற்றி ஏன் மறைத்திருக்கிறாய்?” என்று காந்தாரி துரியோதனனிடம் வினவினாள்.
துரியோதனன் அரண்மனைத் தோட்டக்காரனின் யோசனையின்படி தான் இவ்விதம் செய்ததை காந்தாரியிடம் விளக்கிக் கூறினான்.
துரியோதனன் கூறியதைக் கேட்டதும், 'போரில் பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணன் தான் தோட்டக்காரன் வேடத்தில் வந்திருக்கிறான்!' என்பதை காந்தாரி புரிந்து கொண்டாள். அதை அவள் துரியோதனிடமும் தெரிவித்தாள்.
பிறகு போர்க்களத்தில் பீமன் துரியோதனனின் தொடையை முறித்தான். அதன் காரணமாக துரியோதனன் இறந்தான்.
பூசுற்றிய இடைப்பகுதியில் காந்தாரியின் பார்வைபடாத காரணத்தால், அந்தப் பகுதியே துரியோதனனின் மரணத்திற்குக் காரணமாயிற்று.