காளிதேவியின் திருவருளால் காளிதாசன் மகாகவியாகி விட்டான். பல காவியங்கள் இயற்றிய காளிதாசன் புகழின் உச்சியில் இருந்தான்,
போஜ மகாராஜனும், பொதுமக்களும் மகாகவி காளிதாசனைப் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.
எனினும் வழக்கமாகப் புலவர்களிடையே உண்டாகும் போட்டியும் பொறாமையும் உருவாகியது.
தண்டி என்னும் பெரும் புலவரும் போஜனின் அவையை அலங்கரித்து வந்தார்.
காளிதாசனிடம் வெறுப்புக் கொண்ட புலவர் அணியினர் தண்டிக்கு ஏற்றம் கொடுத்து வந்தார்கள்.
“தண்டியும் காளிதாசனும் காலத்தால் வேறுபட்டவர்கள்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகின்றனர். எனினும் தொன்றுதொட்டு வழங்கி வரும் செவிவழிச் செய்திகள் இந்த இருவரையும் இணைத்தேப் பேசுகின்றன.
“தண்டி, காளிதாசன் ஆகிய இருவரில் மிகவும் சிறந்த கவிஞர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
'இந்தக் கேள்விக்கு அம்பிகையைத் தவிர, வேறு எவரும் தக்க விடையளிக்க வல்லவர் அல்லர்!' என போஜன் முதலான அனைவரும் கருதினர்.
எனவே, எல்லோரும் காளிதேவியின் சந்நிதியில் கூடி, "தண்டி, காளிதாசன் ஆகிய இருவரில் பெருங்கவிஞர் யார் என திட்டவட்டமாகத் தெரிவியுங்கள்" என்று காளி தேவியிடம் வேண்டினார்கள்.
"என் அருள் பெற்ற காளிதாசனே பெருங்கவிஞன்” என்றே காளிதேவி கூறுவாள் எனப் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் காளிதேவியோ, “தண்டியே கவி" என்று மூன்று முறை கூறி உறுதிப்படுத்தினாள்.
இவ்விதம் கூறியதன் மூலம், காளிதேவி தனக்குச் சாதகமான பதிலை அளிக்காததால் காளிதாசன் கோபம் கொண்டான்.
ஆதலால் அவன், "உன்னை நம்பி மோசம் போனேன். என்னைக் கை விட்டாய் காளி!” என்று கூறி புலம்பினான்.
அதோடு அவன், தனக்கு எதிராகத் தீர்ப்பளித்த தேவியை வாயில் வந்தபடி வன்சொற்களால் வசை பாடினான்.
காளிதாசனின் வசை மொழிகளைக் கேட்ட காளிதேவி புன்சிரிப்புடன், “மகனே! நீ என் பதில் முழுவதையும் கேட்காமல் ஆத்திரத்தில் அவசரப்பட்டு என்னைத் திட்டிவிட்டாய்!” என்றாள்.
"என்ன பெரிய பதிலை நீ சொல்லப் போகிறாய்? அதுதான் 'தண்டியே கவி!' என்று அவனைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடி விட்டாயே?” என்று மீண்டும் காளிதாசன் கோபத்துடன் பேசினான்.
“ஆம்! மகனே! மீண்டும் சொல்வேன் தண்டிதான் கவிஞன்! அதில் மாற்றம் இல்லை. ஆனால் நீ யார் தெரியுமா? நானே நீ! என் அருள் பெற்ற நீ என் உருவமாகவே மாறிவிட்டாய் (த்வமேவாஹம், த்வமேவாஹம்) என்று சொல்லி, உன்னை அனைவரின் முன்னால் உயர்த்த நினைத்திருந்தேன். அதற்குள் அவசரப்பட்டு என்னைத் திட்டிவிட்டாயே! மகா காவியங்களைப் பாடும் உன் வாயில் இப்படிப்பட்ட வன்சொற்கள் வரலாமா? ஆதலால், நீ அடுத்த பிறவியில் வாய் திறந்து பேச இயலாத ஊமையாகப் பிறப்பாய்!” என்றாள் காளி.
"தாயே! அறியாமையால் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று மன்றாடினான் காளிதாசன்.
“நீ என் அருள் பெற்ற கவிஞன் என்றாலும், தவறு செய்ததற்குத் தக்க தண்டனை உண்டு. எனினும், தக்க தருணத்தில் உன்னைத் தடுத்தாட் கொள்வேன்” என்று காளி திருவாய் மலர்ந்தருளினாள்.
காளிதாசன் அடுத்த பிறவியில் தமிழகத்திலுள்ள காஞ்சீபுரத்தில் பிறந்தான்.
முற்பிறவியின் தொடர்பு அவனைத் தேவியிடம் பக்தி கொள்ளும்படி செய்தது. அவன் காஞ்சி காமாட்சியிடம் இனம் தெரியாத ஈடுபாடு கொண்டிருந்தான்.
வாய் பேச முடியாத அவன், காமாட்சியின் சந்நிதியில் எப்போதும் அமர்ந்திருந்தான்.
கோயிலில் வழங்கிய பிரசாதமே அவனுக்கு அன்றாட உணவு.
இரவு அர்த்த ஜாம பூஜை முடியும் வரையில் அவன் கோயிலிலேயே இருப்பது வழக்கம்.
ஒரு நாள் இரவு அர்த்த ஜாம பூஜை நடந்து திருக்கோயில் நடை சாத்தும் நேரம்... அப்போது தெய்விக அழகு வாய்ந்த இளம் பெண் ஒருத்தி தாம்பூலம் கமழ பேச இயலாத பக்தனை நோக்கி வந்தாள். அவள் தன் வாயில் குதப்பிய தாம் பூலத்தை அவன் வாயில் கொடுத்து அருள் புரிந்தாள்.
ஆம்! அவள் காஞ்சி காமாட்சி தான்!
பேச இயலாதவனாக இருந்தாலும் பூரண ஞானத்துடன் இருந்த பக்தன் காமாட்சியின் அருள் பெற்றதும் உடனே அருட்கவியாகி விட்டான்! அவனிடமிருந்து மடை திறந்த வெள்ளம் போல் கவிதை பெருக்கெடுத்தது.
அதனால் அவன் காமாட்சியின் கருணையின் உயர்வைப் போற்றி 'ஆர்யா சதகம்' என்று ஒரு நூறு பாடல் பாடினான்!
காமாட்சியின் திருவடியைப் போற்றிப் பாதாரவிந்த சதகம்! என்று ஒரு நூறு பாடல் பாடினான்!
'ஸ்ருதி சதகம்' என்று காமாட்சியைத் துதித்து ஒரு நூறு பாடல் பாடினான்!
காமாட்சியின் கடைக்கண் பார்வையைப் பாராட்டி 'கடாக்ஷ சதகம்' என்று ஒரு நூறு பாடல் பாடினான்.
காமாட்சியின் புன்முறுவலைப் புகழ்ந்து ‘மந்தஸ்மித சதகம்! என்று ஒரு நூறு பாடல் பாடினான்!
இவ்வாறு அவன் ஐந்நூறு பாடல்களை அன்னைக்குச் சூட்டினான்.
ஊமையாக (மூகனாக) இருந்து பின்னர் தேவியின் அருள் பெற்றுப் பாடியதால் அவனை ‘மூககவி' என்று மக்கள் அழைத்தார்கள்.
அவன் இயற்றிய ஐந்நூறு பாடல்களும் 'மூகபஞ்சசதி' என்று புகழ் பெற்றது.
மூககவி இயற்றிய 'ஸ்துதி சதகம்' நூலிலுள்ள ஒரு சுலோகத்தின் கருத்து இது:
“நம் புண்ணிய வசத்தால் பசுபதியாகிய சிவபெருமானின் திருவருள் உருவம் கொணடது போலவும், முழுநிலவு போன்ற முகம் கொண்டவளாகவும், இந்திரனால் துதிக்கப்பட்டவளாகவும் விளங்கும் அன்னை காஞ்சியில் எழுந்தருளியிருக்கிறாள். அவள் ஆகாய கங்கையின் வெள்ளம் போல், ஊமைக்கும் கவிப் பெருக்கை அருள்பவள்; அடியார்களின் துன்பம் துடைப்பவள்."