ஆடம்பர வாழ்க்கையின் அச்சாணியாகத் திகழ்ந்த 'ரோம்' சாம்ராஜ்யத்தில் 'வெசூவியஸ்' என்ற ஓர் எரிமலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் 'போம்பே' என்ற நாகரீக நகரம் அழகுடன் அனைவரின் கண்களையும் கருத்தையும் கவர்ந்து நின்றது.
அந்த நகரத்தின் பாதுகாப்பிற்குக் 'காவலன்' ஒருவனும் நியமிக்கப்பட்டிருந்தான்.
எரிமலையின் அடிவாரத்தில் வாழ்ந்த நகர மக்கள் அன்றாடம் செத்துப் பிழைப்பவர்கள்.
காரணம் 'எந்த நேரத்தில் எரிமலை வெடித்து அனல் குழம்பைக் கக்குமோ!' என்ற பீதியே அவர்களை அணுஅணுவாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் வேறு வழியில்லாத காரணத்தால் அதுவே அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென்று எரிமலை தனது குணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.
அது சாம்பலை வீசியது; நெருப்புக் குழம்பைக் கக்கியது.
அதனால் மக்கள் படபடப்போடும் பயத்தோடும், 'உயிர் தப்பினால் போதும்!' என்ற எண்ணத்தில் உடைமைப் பொருள்களையெல்லாம் போட்டுவிட்டு ஓடினார்கள்; கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, சிறுவர் சிறுமியரைக் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினார்கள்.
பாதுகாப்பான இடங்களைத் தேடி மக்கள் நீண்ட தூரம் ஓடினார்கள்.
இவ்விதம் நகரத்தில் இருந்தவர்கள் எல்லோருமே ஓடிவிட்டார்கள்.
வெறிச்சோடிக் கிடந்த நகரத்தின் மீது எரிமலை தன் அக்கினிக் குழம்பை இறைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் ஒரே ஒருவன் மட்டும் அங்கிருந்து ஓடவில்லை! அவன் தான் அந்த 'நகரக் காவலன்!
பாதுகாப்புப் பணிக்காகத் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட்டு அவன் நகரவேயில்லை!
சீருடையை அணிந்து எடுப்பான தோற்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அவன், எரி மலையின் சீற்றம் கண்டு பயந்தோடவில்லை! நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான்!
பொங்கி வந்த எரிமலைச் சாம்பலும் தீக்குழம்பும் நகரக்காவலனையும் சேர்த்தே மூடியது. அன்றைய தினம் அவன் சாம்பலோடு சாம்பலாகிவிட்டான்.
தப்பியோடிய ஆயிரமாயிரம் மக்கள் இன்று இல்லை! அவர்களைப் பற்றி சிந்திப்பவர்களும் இன்று இல்லை!
ஆனால், "கடமையைச் செய்!" என்ற கீதையின் அறிவுரைக்கு இலக்கணமாக விளங்கிய கடமை தவறாத அந்த மாவீரனை உலகம் இன்றைக்கும் நினைவு கூர்கிறது. காவலனின் நினைவலைகள் அந்தச் சாம்பலின் மீது ஒளி வீசிப் பிரகாசிப்பதை இன்றைக்கும் உலகம் காண்கிறது.
பணியின்போது அவன் அணிந்திருந்த கவசம், தலையணி, கையில் பிடித்திருந்த ஈட்டி ஆகியவற்றை நேபிள்ஸ் நகரத்தின் பொருட்காட்சிசாலையில் இன்றைக்கும் காணலாம்.