சீவகனும் அவன் தோழர்களும் இராசமாபுரத்தில் தங்கியிருந்தார்கள்.
அந்த நகரத்திலிருந்த சீதத்தன் என்னும் வணிகன் பொருளீட்டுவதற்காக ஏராளமான பொருட்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
அந்த மரக்கலம் ஓர் அழகிய தீவைச் சென்றடைந்தது. அவன் தன்னிடமிருந்த பொருட்களைப் பன்மடங்கு விலைக்கு விற்றான். அதற்கு ஈடாக ஏராளமான பொன்னைப் பெற்றான். தன் மரக்கலத்தில் அந்தப் பொன்னை நிரப்பினான். பணியாட்களுடன் தன் நகரம் நோக்கி மரக்கலத்தைச் செலுத்தினான். ஐநூறு காத தூரம் இனிதாகப் பயணம் சென்றது.
வெள்ளி மலையில் இருந்த வித்தியாதர வேந்தனாகிய கலுழவேகன் தன் மகள் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தில் தான் திருமணம் நிகழும் என்பதை ஜோதிடர்கள் வழியாக அறிந்தான். அவன் சீதத்தன் வழியாக அந்தத் திருமணத்தை நிகழ்த்தத் திருவுளம் கொண்டான்.
மாயங்கள் வல்ல தரனை அழைத்த அவன், “வணிகன் சீதத்தனை என்னிடம் அழைத்து வருக” என்றான்.
தரன் தன் திறமையால் கடலில் பெரும் புயல் ஒன்றை எழும்பச் செய்தான். அவன், சீதத்தனின் மரக்கலம் புயலில் சிக்கிக் கடலில் மூழ்கியதைப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கினான்.
தப்பிப் பிழைத்துக் கரையேறிய சீதத்தன் மரக்கலம் மூழ்கி விட்டதை நினைத்து வருந்தியபடி இருந்தான்.
அங்கு வந்த தரன், "வணிகனே! உன் மரக்கலம் மூழ்கவில்லை. எல்லாம் எங்கள் வித்தியாதரரின் மாயம். எங்கள் அரசர் உங்களை அழைத்து வரச்சொன்னார். உங்களுக்குப் பெரும் சிறப்புகள் கிடைக்க இருக்கின்றன” என்று பணிவுடன் கூறினான்.
அதைக் கேட்ட வணிகன், "உங்கள் அரசர் என் நலத்தை விரும்புவது உண்மையானால், எனக்கு ஏன் இப்படிப்பட்ட துன்பங்களைத் தந்தார்?” என்று கோபத்துடன் கேட்டான்.
அதற்குத் தரன், “வணிகரே! துன்பம் அடைந்தவருக்கே இந்த உலகில் இன்பம் அடைய உரிமை உண்டு. எங்கள் அரசர் நீங்கள் இன்பம் பெற வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மாயையால் உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினார்” என்றான்.
இந்த விளக்கத்தைக் கேட்டு மகிழ்ந்த சீதத்தன் அவனுடன் சென்றான். பெரும் புகழ் பெற்றான்.