மராட்டிய மாநிலத்தில் பிறந்த ஞானி ஏகநாதர்.
பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருடைய உள்ளம் இறையன்பை நாடியது.
மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் எப்பொழுதும் அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராகவே இருந்தார்.
ஒரு சமயம், “ஏக நாதா! நீ தேவகிரிக்குச் சென்று ஜனார்த்தன பந்த் என்பவரைப் பார். அவர் உனக்குக் குருவாக இருந்து வழி காட்டுவார்" என்று யாரோ கூறுவது போல் அவருக்குக் கேட்டது.
ஆதலால், அவர் தேவகிரிக்கு விரைந்து சென்று, ஜனார்த்தன பந்தின் திருவடிகளில் விழுந்து பணிவாக வணங்கினார்.
“என்னைச் சீடனாக ஏற்று இறையருள் எனக்குக் கிடைக்கும்படி அருள் புரியுங்கள்" என்று வேண்டினார்.
தேவகிரி மாகாணத்தின் திவானாக இருந்த ஜனார்த்தன பந்த் தம் சீடராக ஏகநாதரை ஏற்றுக்கொண்டார்.
உள்ளன்புடன் குருவிற்கு எட்டு ஆண்டுகள் பணி விடை செய்து வந்தார் ஏகநாதர்.
ஒரு நாள் மாலை நேரத்தில் ஏகநாதரிடம் கணக்குப் பேரேட்டைத் தந்த ஜனார்த்தன பந்த், “இந்தப் பேரேட்டுக் கணக்கில் ஒரு காசு குறைகிறது. எங்கே அந்தத் தவறு என்று கண்டுபிடி” என்றார்.
ஏகநாதர் இரவு முழுவதும் விழித்துக் கணக்குகளைச் சரி பார்த்தார்.
பொழுது விடிய சிறிது நேரத்திற்கு முன் அந்தத் தவற்றைக் கண்டுபிடித்தார். அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பிழையைத் தாம் கண்டுபிடித்து விட்டதைப் பற்றி மகிழ்ச்சியுடன் குருவிடம் தெரிவித்தார்.
அதற்கு ஜனார்த்தன பந்த், "கணக்கில் உள்ள சிறுபிழையைக் கண்டு பிடிக்கவே நீ எவ்வளவு மனஒருமையைப் பயன்படுத்த வேண்டி வந்தது! அப்படியானால் பரம்பொருளான இறைவனைக் கண்டுபிடிக்க எவ்வளவு மன ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டியிருக்கும்! கணக்கில் சிறு பிழையைக் கண்டுபிடித்ததற்கு இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறாய். வாழ்க்கை என்னும் கணக்கில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்திக் கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாய்?” என்று கேட்டார்.
தன்னை உணர்ந்த ஏகநாதர் அதன்பிறகு தன்னைச் சோதனை செய்வதிலும் ஆழ்ந்த தியானத்திலும் ஈடுபட்டார்.