தன் ஒரே மகனான உதயகுமாரன் கொல்லப்பட்டதற்கு மணிமேகலைதான் காரணம் என்று நினைத்தாள் கோப்பெருந்தேவி. அதனால் அவள், பெண் துறவியான மணி மேகலையைக் கொடுமைப்படுத்த நினைத்தாள்.
தன் கணவன் சோழ அரசனிடம், “துறவியான மணிமேகலை சிறையில் இருப்பது தகாது. எனவே அவளை நம் அந்தப்புரத்திற்கு அனுப்பி வையுங்கள். நான் அவளை நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்" என்றாள்.
மனைவியின் சூழ்ச்சியை அறியாத அரசன் அதற்கு ஒப்புக்கொண்டான்.
அந்தப்புரத்திற்கு வந்த மணிமேகலையிடம் அன்பு கொண்டவள் போல் கோப்பெருந்தேவி நடித்தாள். அதோடு அவள் பழி வாங்கும் படலத்தைத் தொடங்கினாள்.
நஞ்சூட்டி அவள் மணிமேகலையைக் கொல்ல முயற்சி செய்தாள். ஆனால் நஞ்சை உண்டும் மணிமேகலை உயிருடன் இருப்பதை அறிந்தாள். பல நாட்கள் மணிமேகலையைப் பட்டினி போட்டாள். பசிப்பிணி போக்கும் மந்திரம் அறிந்திருந்த மணிமேகலை எந்தத் துன்பமும் இன்றி இருந்தாள்.
நாளாக நாளாகக் கோப்பெருந்தேவிக்கு, மணிமேகலை ஒரு சாதாரண பெண் அல்ல; தெய்வத்தன்மை உடையவள்!' என்பது புரிந்தது. தான் மணிமேகலைக்குச் செய்த துன்பங்களை எல்லாம் நினைத்து அவள் வருந்தினாள்.
உள்ளம் திருந்திய அவள் மணிமேகலையின் திருவடிகளில் விழுந்து வணங்குவதற்கு வந்தாள்.
அவளைத் தடுத்து நிறுத்திய மணிமேகலை, அம்மா! உங்கள் மகன் உங்களை விட்டு நீங்கிவிட்டான். அதற்காக நீங்கள் வருந்துகிறீர்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்: உங்கள் மகனின் உடலுக்காக நீங்கள் அழுகிறீர்களா? அல்லது அவன் உயிருக்காக அழுகிறீர்களா?
"உடலுக்காக நீங்கள் அழுவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் மகனின் உடலைப் பாதுகாத்து வைத்திருக்க முடியும்.”
"ஆகவே நீங்கள் உங்கள் மகனின் உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் கூடுதான் உடல். உடலை விட்டு நீங்கிய உயிர் இன்னொரு உடலில் சென்று தங்கும். எந்த உடலை விட்டு நீங்கிய உயிர் எந்த உடலில் சென்று தங்குகிறது என்பதை யாராலும் அறிய இயலாது. உங்கள் மகனின் உயிர் ஏதேனும் ஓர் உடலில் தங்கி இருக்கும். உங்கள் மகனிடம் உண்மையான அன்பு உங்களுக்கு இருக்குமானால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள். உங்கள் மகனுடைய உயிரும் அந்த அன்பைப் பெறும்” என்று அறிவுரை கூறி ஆறுதல் வழங்கினாள்.