முன்னொரு காலத்தில் ஜானுசுருதி என்ற அரசன் 'மஹாவ்ருஷா' என்ற நாட்டை ஆண்டு வந்தான்.
அவன் நாட்டில் வாழ்ந்த மக்கள் அவனை மிகவும் நல்லவன் என்றும், தான தர்மங்கள் செய்பவன் என்றும் பெரிதும் போற்றிக் கொண்டாடினார்கள்.
முக்கியமாக, ஜானுசுருதி தன் நாடு முழுவதும் பல சத்திரங்களையும், யாத்திரிகர்கள் தங்கும் விடுதிகளையும் கட்டினான். அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் இலவச உணவு அளிக்கவும் அவன் ஏற்பாடு செய்திருந்தான்.
மேலும் அவன் பல இலவச உணவு விடுதிகளையும் அமைத்திருந்தான்.
பொதுமக்கள் எல்லோரும் தங்கள் அரசனின் நற்செயல்களைப் புகழ்ந்து பேசினார்கள்.
பொதுமக்களின் பாராட்டு மொழிகளால் மகிழ்ந்த ஜானுசுருதி, 'மற்றவர்கள் யாருமே செய்யாத அளவுக்கு நான் நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன்!' என்று நினைத்துக் கர்வம் கொண்டான்.
தான் செய்த தான தர்மங்களால் தனக்கு நிறையப் புண்ணியம் கிடைத்து விட்டது என்றும் அவன் நம்பினான்.
கோடைக்காலத்தில் ஒருநாள் மாலையில் அரசன் ஜானுசுருதி, தன் அரண்மனையின் கூரையற்ற மேல் மாடியில் ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.
அப்போது அவன், தான் செய்து வரும் நற்செயல்களைப் பற்றி பெருமையுடன் நினைத்துப் பார்த்தான்.
அந்தச் சமயத்தில் இரண்டு வெள்ளை அன்னப்பறவைகள் தங்களுக்குள் பேசிய படியே ஆகாயத்தில் பறந்து சென்று கொண்டிருந்தன.
அவற்றில் ஆண் பறவை, “பெண்ணே! ஜாக்கிரதையாகப் பறந்து வா. ஜானுசுருதி ராஜாவின் முக ஒளியின் கிரணங்களின் மத்தியில் நீ அகப்பட்டுக் கொண்டால் எரிந்து சாம்பலாகிவிடுவாய்” என்று பெண் பறவையிடம் கூறியது.
பெண் பறவை, "ஏதோ இந்த ராஜாவைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்கிறீர்களே! கைவண்டிக்காரர் ரைக்வாவின் பெயருக்கும் பெருமைக்கும் முன்னால் இந்த ராஜாவின் புகழ் எம்மாத்திரம்? இருவரும் சமம் என்று ஒப்பிட முடியுமா?"
ஆண் பறவை, "நற்காரியங்கள் செய்து வரும் இந்த அரசனைவிட, அந்த ரைக்வா அப்படி என்ன செய்துவிட்டார்?"
பெண் பறவை (சிரித்துக்கொண்டே), “நாம் ஆகாய மார்க்கமாகப் பல இடங்களில் சுற்றி வருகிறோம். இந்த அரசன் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத்தானே அகங்காரத்துடன் பல காரியங்களைச் செய்கிறான்! எல்லாம் இருந்த போதிலும் அவனுக்கு மன அமைதி இல்லையே! ரைக் வாவோ தான் இருந்த இடத்திலேயே அமைதியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார். நாளை நடப்பதைப் பற்றி அவர் கொஞ்சம்கூட சிந்திப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. பலர் அவரிடம் ஆத்ம தத்துவம் குறித்து உபதேசம் பெறுவதற்காகச் செல்கிறார்கள்!"
இவ்விதம் பேசிக்கொண்டே இரண்டு பறவைகளும் பறந்து சென்று மறைந்தன.
ரைக்வாவின் புகழைப் பறவைகளின் உரையாடல் மூலம் அறிந்த அரசனின் மனதில் கவலை குடிகொண்டது.
'அந்த ரைக்வா என்பவர் யார்? அவரைப் பார்க்க வேண்டும்!' என்ற எண்ணம் ஜானு சுருதியின் உள்ளத்தில் தீவிரமாக எழுந்தது.
மறுநாள் காலையில் அரசன் தன் வீரர்களை அழைத்து, "ரைக்வா என்பவர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்று விசாரித்து வந்து எனக்குத் தகவல் தெரிவியுங்கள்!” என்று ஆணை பிறப்பித்தான்.
சில நாட்கள் கடந்தன. வேலையாட்கள் ரைக்வாவைக் கண்டுபிடிக்க முடியாமல் அரசனிடம் திரும்பி வந்தார்கள்.
விவரம் அறிந்த ஜானுசுருதி தன் வீரர்களிடம், "மீண்டும் ரைக்வாவை நன்றாகத் தேடுங்கள்" என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் கிராமம் கிராமமாகச் சென்று ரைக்வாவைத் தேடி விசாரித்தார்கள்.
முடிவில் ரைக்வா என்பவன் ஒரு சாதாரண கைவண்டிக்காரன் என்றும், அவன் இருக்கும் இடமும் அரசனின் வீரர்களுக்குத் தெரியவந்தது.
'அரசர் நிச்சயமாக மதியிழந்து விட்டார்! இல்லாவிட்டால் இந்தச் சாதாரண ஒரு கைவண்டிக்காரனைப் பற்றி இப்படி நம்மை விசாரிக்கச் சொல்வாரா?' என்று அரசனின் வீரர்கள் நினைத்தார்கள்.
அவர்கள் தங்கள் அரசனின் ஆவலையும் மனதையும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் அவ்விதம் நினைத்தார்கள்.
வீரர்கள் அரசனிடம் ரைக்வாவைப் பற்றித் தெரிவித்தார்கள்.
அரசன் 600 பசுக்களையும், முத்துமாலைகளையும், குதிரை பூட்டிய ரதத்தையும், மற்றும் பல பரிசுகளையும் எடுத்துக் கொண்டு பரிவாரத்துடன் ரைக்வாவிடம் சென்றான்.
அரசன் ஜானுசுருதியின் வருகையைக் கண்டு ரைக்வா முதலில் சிறிது ஆச்சரியப்பட்டார். எனினும் விரைவில் அவருக்கு அரசன் தன்னிடம் ஆத்ம ஞான உபதேசம் பெறுவதற்காகத்தான் வந்திருக்கிறான் என்பது புரிந்தது.
அரசன் ரைக்வாவை மிகவும் பணிவுடன் வணங்கி, "தாங்கள் எந்த தெய்வத்தைத் தியானம் செய்கிறீர்கள்? அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டான்.
ஆனால் ரைக்வா உடனே உபதேசம் செய்யவில்லை.
அவர் அரசன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களை ஏற்க மறுத்து, “நீ கொண்டு வந்த பரிசுப் பொருட்கள் எனக்கு வேண்டாம். நீ உன் ராஜ்யத்தையே கொடுத்தாலும் கூட ஆன்மிக ஞானம் பெற முடியாது” என்று கூறி, அரசனைத் திருப்பி அனுப்பி விட்டார்.
அரசன் தனது முயற்சி தோல்வியடைந்தது குறித்து மனம் வருந்தினான்.
அவன் ரைக்வாவின் வைராக்கியத்தை நினைத்து, மீண்டும் அவரைப் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.
பிறகு அவன் மீண்டும் ஒரு நாள் ஆயிரம் பசு மாடுகளையும், முத்துமாலைகளையும், குதிரை பூட்டிய ரதத்தையும், தன் மகளையும் அழைத்துக்கொண்டு ரைக்வாவைப் பார்க்க வந்தான்.
ரைக்வாவிடம் அரசன், “நீங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தையும் உங்களுக்கேக் காணிக்கையாக அளிக்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று வேண்டினான்.
ரைக்வா அரசனின் உண்மையான ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் கண்டு பின்வருமாறு உபதேசம் செய்தார்:
"அரசே! எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக் கொண்டும், செயலாற்றவும் செய்யும் பரம்பொருள் ஒன்று இருக்கிறது. அது இரண்டு விதமாகச் செயல்படுகிறது. அதாவது, பிரபஞ்ச ரீதியில் வாயுவாகவும், ஜீவன்களுக்குள் பிராணனாகவும் செயல்படுகிறது. வெளி உலக ரீதியில் வாயு, சமஷ்டி பிராணன், சூத்ராத்மா, ஹிரண்ய கர்ப்பன் என்றெல்லாம் அதைக் கூறுவார்கள். ஜீவனுக்குள் செயல்படும் போது அது பிராணன் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பரம்பொருளிடம் உள்ள பயத்தால்தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவையெல்லாம் தங்களுக்குரிய பாதையில் முறை தவறாமல் செல்கின்றன. மழை பெய்வதும், யமதர்மராஜன் மரண விதியை நடத்துவதும் அந்தப் பரம்பொருளால்தான் நடைபெறுகின்றன. அந்தப் பரம்பொருள் சக்தி, பிரளயக் காலத்தில் எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொண்டு, பிறகு சிருஷ்டி செய்து, செயலாற்றும்படி செய்து, மறுபடியும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அது போலவே ஜீவனின் உள்ளே இருக்கும் பிராணன் உறக்கத்தில் மனதையும், எல்லாப் புலன்களையும் அடக்கி, உள்ளே இழுத்து நிறுத்திச் செயலற்று இருக்கச் செய்கிறது. அதே பிராண சக்திதான் இவை எல்லாவற்றையும் செயல்படவும் வைக்கிறது.
இவ்வாறு ஒரே பரம்பொருள்தான் - பிரம்மாண்டத்திலும் (வெளிஉலகிலும்), பிண்டாண்டத்திலும் (உடலிலும்) இரண்டு விதங்களில் செயல்படுகிறது. எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கி ஆளும் காரணத்தால் ‘ஸம்வர்க்கம்' என்ற பெயரால் அந்தப் பரம்பொருள் அழைக்கப்படுகிறது. அதைத் தான் நான் தியானம் செய்கிறேன். வெளியிலும் உள்ளேயும் முறையே பரமாத்மா என்றும், ஆத்மா என்றும் அறியப்பட்டு செயல்பட்டாலும் இது ஒன்றேயாகிய பரம்பொருள் என்று தியானம் செய்ய வேண்டும். இதுதான் ‘ஸம்வர்க்க வித்யை' என்று சொல்லப்படுகிறது.
அரசே! கர்வத்தையும், டம்பத்தையும், ஆடம்பரத்தையும் விட்டு, 'நான் செய்கிறேன்' என்ற ஆணவத்தை முற்றிலும் தவிர்த்து, தான தர்மங்களைச் செய்து வாருங்கள், இந்த உண்மையை எவன் அறிந்து கொள்கிறானோ, அவனுக்கு உலகில் வேறொன்றும் வேண்டியதில்லை. அவன் எல்லா அனுபவங்களிலும் ஆனந்தத்தைப் பெற்று திருப்தியாக வாழ்கிறான்" என்று ரைக்வா அரசனுக்கு உபதேசித்தார்.
அரசன் தன் மகளை ரைக்வாவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதோடு அவன் அந்தக் கிராமத்திற்கு 'ரைக்வ பர்ணம்' என்ற பெயரையும் சூட்டினான்.