ஓர் ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளம் நிறையத் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நிறைந்திருந்ததால் அந்தக் குளம் மிக அழகாக விளங்கியது.
அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர்ப் பூங்கொடிகள் இருந்தன. கொக்கு நாரை போன்ற நீர்ப்பறவைகளும் இருந்தன.
எல்லாம் ஒரு குடும்பம் போல் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்தக் குளம் தன் உறவினர்களான பூங்கொடிகளுக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிக்கக் கொடுத்து உயிர்வாழச் செய்தது.
அது போலவே, அன்புடன் தன்னிடமுள்ள மீன்களையும் நண்டுகளையும் நீர்ப்பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து உறவாடிக் களித்தது.
ஓர் ஆண்டு உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. ஊரே வறண்டு போய் விட்டது. பயிர் பச்சைகளும் விளையவில்லை. அந்தக் குளத்தில் இருந்த நீரும் சிறிது சிறிதாக வற்றி, கடைசியில் அடித்தரையும் காய்ந்து போய் விட்டது.
இனி அந்தக் குளத்தில் தங்களுக்கு உணவு கிடைக்காது என்றறிந்த பறவைகள் வேறு நீருள்ள குளத்தை நாடிப் பறந்து சென்று விட்டன.
நீர்ப் பூங்கொடிகளில் சின்னஞ்சிறிய கொடி ஒன்று, மற்ற பூங்கொடிகளைப் பார்த்து, "இந்தக் குளத்திலேயே நாம் இனியும் இருந்தால் காய்ந்து கருக வேண்டியதுதான். நீர்ப் பறவைகளைப் போல் நாமும் வேறு எங்காவது போய் விட்டால் என்ன?" என்று கேட்டது.
அதற்குப் பெரிய பூங்கொடி ஒன்று பதிலளித்தது:
"இந்தக் குளம் தண்ணிர் நிறைந்திருந்த போது தாயைப் போல் நம்மை ஆதரித்துக் காப்பாற்றியது. நீர்ப்பறவைகள் சிறிது கூட நன்றியில்லாமல் துன்பம் வந்த காலத்தில் பறந்து போய்விட்டன. நாம் நன்றியற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது. காய்ந்து கருகினாலும் இந்தக் குளத்திலேயேக் கிடந்து சாக வேண்டியதுதான். அதற்கு வந்த துன்பம் நமக்கும் வரட்டும் என்று பங்கு கொள்வதுதான் உறவு" என்று கூறியது. எல்லாப் பூங்கொடிகளும் அதன் கருத்தை ஒப்புக்கொண்டன. குளத்தின் வறண்ட கரையிலேயே அவை ஒட்டிக் கிடந்து தங்கள் உறவை நிலை நிறுத்தின.