ஒரு மனிதனுக்குக் காலிலே புண் வந்தது. வலி தாங்க முடியாமல் கால் வருந்தியது. அதனால் நடக்க முடியவில்லை. கால்படும் துயரத்தைக் கண்டு கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.
மற்றொரு முறை கையிலே தீச்சுட்டுவிட்டது. கை உதறி உதறித் துடித்தது. அதைக் கண்ட போதும் அந்தக் கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.
அதே மனிதனுக்கு முதுகிலே பிளவை வந்தது. துன்பங்கள் அடுத்தடுத்து ஒருவனையே வந்து வாட்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது அந்த மனிதனைப் பொறுத்த வரையில் உண்மையாயிற்று.
முதுகிலே பிளவை வந்ததால் முதுகால் தாங்க முடியவில்லை. சாயவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், முதுகு மிக மிகத் தொல்லைப்பட்டது. தம் பார்வைக்குத் தென்படாத முதுகுக்கு வலி வந்த போதிலும் கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணரீர் வடித்தன.
இப்படி ஒவ்வோர் உறுப்பிலும் ஏதாவது நோய், வந்த போதெல்லாம் அந்தக் கண்கள் அவற்றைக் காணப் பொறுக்காமல் கலங்கிக் கண்ணீர் வடித்தன.
ஒரு முறை அந்தக் கண்களுக்கே துன்பம் வந்து விட்டது. ஒரு கண்ணில் ஏதோ ஒரு துரும்பு விழுந்து கண்ணை உறுத்தி வருந்தியது. துரும்பு விழுந்த கண்ணும் விழாத கண்ணும் சேர்ந்து துடிதுடித்துக் கலங்கின.
அப்போது கண்கள் பட்ட துயரைக் கண்டு வேறு எந்த உறுப்பும் வருத்தவில்லை. கண் பொட்டையானால் கூட அவை அதற்காக வருத்தப் படப்போவதில்லை என்றே தோன்றியது.
கை மட்டும் ஆதரவாக வந்து தன் விரல்களால் கண்ணில் விழுந்த துரும்பை எடுக்க முயன்றது. கண்ணிலிருந்து வடிந்த நீரைத் துடைத்து விட்டது.
"கண் அண்ணா, நீ எல்லோருக்காகவும் வருந்தினாய்; ஆனால் உன் துயரத்தைக் கண்டு ஒருவரும் வருந்தவில்லையே!” என்று கூறி அதைத் தேற்றியது கை.
மறுபடியும் காலிலே ஆணி குத்திய போது கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கத் தவறவில்லை. கால் தனக்காக வருந்தவில்லையே என்று அது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
இதுபோலத்தான், பெரியவர்கள் பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகவே கருதி உருகுவார்கள். பிறர் தமக்காக வருத்தப்படவில்லை என்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.