விதேக நாட்டு மன்னனான நிமி இந்த உலகில் தான் பிறந்தது எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிப்பதற்கே என்ற கொள்கையுடையவன். அவன் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.
அவனுக்குத் தன்னைச் சுற்றி ஓர் உலகம் இருப்பதோ, அங்கு வாழும் மக்கள் தாங்கொணாத துன்பங்களால் பீடிக்கப்பட்டிருப்பதோ தெரியாது. அவனைப் பொறுத்த வரையில் எல்லாம் இன்பமயம்தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்தானே! அது நிமியின் வாழ்க்கையிலும் உண்மையாயிற்று.
அவன் உடம்பு முழுவதும் ஒருவித எரிச்சல் கண்டது அவனால் எதையும் செய்ய முடியவில்லை. அக்கினிக்குண்டத்தில் இருப்பது போன்ற நிலையில் அவன் இருந்தான். மன்னரின் தவிப்பைக் கண்ட ஆஸ்தான வைத்தியர், சந்தனத்தை அவ்வப்போது புதிதாக அரைத்து அந்தச் சந்தனக் குழம்பை உடம்பு முழுவதும் பூசிக்கொள்ளும்படி ஆலோசனைக் கூறினார்.
அரசனின் உடல் நிலை கண்டு வருந்திய அவனது மனைவிமார்கள் சந்தனம் அரைப்பதையும், அரசன் உடம்பில் அதைப் பூசும் வேலையையும் தாமேச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.
ராணிமார்களுக்கு நிமி மன்னன் மீது அளவு கடந்த அன்பு எனவே அவர்களே அந்த வேலையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
ராணிமார் சந்தனம் அரைக்கும்போது அவர்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒன்றோடொன்று மோதின. அதுகாரணமாக அரண்மனையில் ஒரு வகையான இனிய ஓசை அலையலையாகக் கேட்கத் தொடங்கியது.
ஆனால் மன்னனுக்கோ இந்த இனிய ஓசை பின்னும் எரிச்சலைக் கொடுத்தது. அதை அரசன் வெளிப்படையாகவும் தெரிவித்தான்.
உடனே, ராணிமார் மங்கலச்சின்னமாக விளங்கும் வளையல்களைக் கழற்றிவிட்டு ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு வளையல் மட்டும் அணிந்துகொண்டு சந்தனம் அரைப்பதில் ஈடுபட்டனர். வளையல் ஓசை நின்றது. நிமி மன்னனுக்குச் சந்தேகம் தோன்றியது “என்ன, சந்தனம் அரைப்பதை நிறுத்தி விட்டார்களா? என் உடம்பு பற்றி எரிகிறதே! என்னைப் பற்றி யாருக்கும் அக்கரை இல்லையா?' என்று கத்தினார்.
அமைச்சர் ஓடோடி வந்தார். 'அரசே! சந்தனம் அரைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் ராணிகள் கைகளில் ஒரே ஒரு வளையலை மட்டும் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவ்வளவு கோலாகலமாக இருந்த சப்தம் நின்றுவிட்டது. ஆனாலும் சந்தனம் தொடர்ந்து அரைக்கப்படுகிறது' என்றார்.
அரசனுக்குத் திடீரென்று அமைச்சர் கூறியதைக் கேட்டதும் ஞானோதயம் ஏற்பட்டது.
'ஆகா தனிமையில் இத்தனை இன்பம் இருக்கிறதா? தனிமையாக இருந்து அந்தப் பரம்பொருளை எண்ணாமல் இவ்வளவு நாள் நரக வாழ்க்கையைச் சுகபோகம் என்று எண்ணி வீணாகக் கழித்து விட்டேனே!' என்று வருந்தினான்.
உடனே ஆடை ஆபரணங்களைக் களைந்தான். தனிமையை நாடி அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். சிறந்த தவமியற்றிப் பரம்பொருளைக் கண்டு பெரும்பேறு பெற்றான்.