தசரத மகாராஜா ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது மிருகத்தின் ஒலி என்று தவறாக எண்ணி அம்பெய்ய, ஓர் அந்தணச் சிறுவன் மாய்ந்தான்.
அந்தச் சிறுவனின் பெற்றோர் வயதானவர்கள். அவர்கள், “புத்திர சோகத்தினால் உனக்கு மரணம் ஏற்படட்டும்'' என்று தசரதனைச் சபித்தனர். இது அனைவருக்கும் தெரியும்.
அளவில்லாத வருத்தத்தோடு அரண்மனை திரும்பினான் தசரதன்.
தான் சாபம் பெற்ற விவரத்தை மன்னன் கோசலையிடமும் சுமத்திரையினிடமும் கூறினான். பதியின் வருத்தத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
கைகேயியிடம் கூறிய போது அவள் மிகவும் மகிழ்ந்தாள்.
தசரதன் சினமுற்று அவளது மகிழ்ச்சிக்கான காரணத்தை வினவினான். “புத்திரசோகம் ஏற்படட்டும் என்று சபிக்கப்பட்டதால் நமக்குப் புத்திரபாக்கியம் உண்டு என்பது உறுதியாகிறது. முதலில் அது குறித்து மகிழ்வோம்" என்றாள் கைகேயி.
தசதரனுக்கு அதுவரையில் புத்திரபாக்கியம் இல்லை, இது கைகேயியின் அறிவுக் கூர்மையைக் காட்டுகிறது.
அதன் பிறகு புத்திரகாமேஷ்டி யாகம் நடந்து, ஸ்ரீராம லட்சுமண பரத சத்ருக்னர்கள் அவதரித்து, வரலாறு தொடர்கிறது.
ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட முடிவாகிறது. பட்டாபிஷேகத்துக்கு முதல் நாள் மஞ்சள் பட்டு உடுத்துக் கொண்டு ஸ்ரீராமனும் சீதையும் கைகேயியைச் சேவிக்க வருகின்றனர்.
சீதை குனிந்து நான்கு முறை சேவிக்கும் போது சீதையின் திருமாங்கல்யம் சலசலக்கிறது.
கைகேயியின் மனதில் முடிவேற்படுகிறது:
"அந்தணச் சிறுவனை இழந்ததனால் அந்தண வயோதிகர்கள் சாபம் கொடுத்தனர். புத்திரசோகத்தினால் என் கணவர் இறக்க வேண்டும். புத்திர சோகம் என்றால்? புத்திரனை இழப்பதாலும் சோகம்! பிரிவதாலும் சோகம்! இவ்வளவு லட்சுமிகரமாக என் கண் முன்னே நிற்கும் இந்தக் கண்மணி சீதையின் திருமாங்கல்யம் காப்பாற்றப்பட வேண்டும். சாபம் நிறைவேறுவது, ராமன் தந்தையைப் பிரிவதாலேயே ஏற்படட்டும்! என் ராமனும் சீதையும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். இந்தக் குழந்தையின் மாங்கல்யம் நிலைக்க வேண்டும்!” என்று எண்ணியவளாய் ராமனைத் தசரதனிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் கைகேயி ஈடுபட்டாள்.
இப்போது சொல்லுங்கள் கைகேயி நல்லவளா? கெட்டவளா?