ஒரு சமயம் கண்ணனைச் சந்திக்க நாரதர் மிகுந்த துக்கத்தோடு சென்றிருந்தார்.
“பேரானந்தத்தில் இருக்கும் என்னருகில் நீயும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். ஆனால் துக்கப்படுகிறாயே. உன் துயரத்தை நீக்க ரிஷிகேசம் போய் வா" என்றார் கண்ணன்.
போகும் வழியில் கங்கையில் நீராடிய போது ஒரு மீன் மேலே துள்ளி வந்து, "நாரதரே, நலமா?” என்றது.
அதற்குப் பதிலாக, ''என்ன மீனே, நீ நலமா?" என்றார் நாரதர்.
“நாரதரே, எனக்கு இங்கு தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் துன்புறுகிறேன்” என்றது மீன்.
மிகுந்த கோபத்துடன் நாரதர் கேட்டார், "தண்ணீரிலேயே இருந்து கொண்டு தாகத்திற்காகத் துன்புறுகிறாயா? இது என்ன வினோதமாக உள்ளதே"
"பேரானந்தராகிய கண்ணனின் அருகிலே இருந்து கொண்டு, எப்போதும் துக்கப்படுவதை விட இது ஒன்றும் வியப்பில்லையே?'' என்றது மீன்.
பேரானந்தம் அருகிலிருந்தும் உணராமல் துக்கப்பட்டதற்காக வருந்தினார் நாரதர்.
அப்போது மீனாக இருந்த கண்ணன் உருமாறிக் காட்சி தந்தார்.