ஹஜ்ரத் அபூ பக்கர் அவர்கள் தொழிலிலே ஒரு ஜவுளி வியாபாரி. அவருடைய நாணயமும் நல்லொழுக்கமும் தெய்வ பக்தியும் கலீபா என்னும் ஜனாதிபதிப் பதவியை அவருக்கு ஈட்டிக் கொடுத்தது.
பதவிக்கு வந்த பிறகும் கூட, அவர் ஜவுளிகளைச் சுமந்து கொண்டு போய் வியாபாரம் செய்வதை விடவில்லை. அதிலிருந்து கிடைத்த சொற்பத் தொகையைக் கொண்டே தமது சொந்த வாழ்க்கையை அவர் நடத்தி வந்தார்.
இதை அறிந்ததும் அவருக்குப் பொது நிதியிலிருந்து உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
ஒரு நாள் அவருடைய மனைவியார் ஓர் இனிப்புப் பலகாரம் தின்ன ஆசை கொண்டார். அதற்காகக் குடும்பச் செலவிற்கு ஹஜ்ரத் அபூ பக்கர் அவர்கள் கொடுக்கும் பணத்திலே ஒரு சிறு தொகையை நாள்தோறும் மிச்சம் பிடித்து வந்தார்.
சில தினங்களுக்குப் பின்னர் தாம் விரும்பிய இனிப்புத் தின்பண்டம் தயாரிக்கப் போதிய அளவு பணம் சேர்ந்தது. இதை அவர் கணவரிடம் சொன்ன பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
“நீ இப்பொழுது சேர்த்து வைத்திருக்கும் தொகை இத்தனை நாளாகப் பொது நிதியிலிருந்து நாம் நமது தேவைக்கு மேல் அதிகமாகப் பெற்று வந்த தொகையைக் குறிக்கிறது” என்று ஹஜ்ரத் அபூ பக்கர் அவர்கள் தெரிவித்து, மீதப்படுத்தியிருந்த தொகையைப் பொதுநிதியிலே சேர்த்து விட்டார்கள். அவர் அத்தோடு நிற்கவில்லை; தமது மனைவியார் மீதப்படுத்திய அளவிற்குத் தமது உபகாரச் சம்பளத்தையும் அடுத்த மாதத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள்.
ஹஜ்ரத் அபூபக்கர் அவர்கள் இஸ்லாத்தின் முதலாவது கலீபாவாக நியமனம் பெற்றார்.
மரணத்தறுவாயில் இருந்தபொழுது தமது அருமைப் புதல்வியார் ஆயிஷா நாயகியை அருகில் அழைத்து, “இதோ பார், அம்மா! நான் மரணமடைந்த பிறகு என் தேவைக்காகப் பொது நிதியிலிருந்து நான் பெற்ற பொருள்களையெல்லாம் எனக்கு அடுத்து வரும் கலீபாவிடம் ஒப்படைத்து விடவேண்டும். அவற்றில் ஒன்றையும் நீ தீண்டக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
அவர் மரணமடைந்த பொழுது அவருடைய சொந்தச் சொத்து என்று ஒரு தங்க நாணயமோ, வெள்ளி நாணயமோ கூட இல்லை. பால் கொடுக்கும் ஒட்டகம், தண்ணீர் குடிக்கும் பாத்திரம் ஒன்று, ஒரு படுக்கை விரிப்பு ஆகியவை மட்டுமே அவரிடம் இருந்தன. அவற்றையும் அவருடைய புதல்வியார் தந்தையின் கட்டளைப்படி அடுத்த கலீபாவிடம் ஒப்படைத்து விட்டார்.